தமிழகத்தின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 163 புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

 தமிழகத்தின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 163 புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.சட்டசபையில் இதுதொடர்பாக அவர் பேசியதாவது: மாநிலத்தின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 163 புதிய படிப்புகள் தொடங்கப்படும். இதில், 62 எம்.பில்., படிப்புகளும், 52 பிஎச்.டி., படிப்புகளும் அடக்கம்.மேலும், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகள் அளவில், பல புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும். கடந்த 2011ம் ஆண்டில் எனது அரசு பொறுப்பேற்றதிலிருந்து, உயர்கல்வியில் புதிதாக 797 படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன்மூலம், மாணவர்களின் ஒட்டுமொத்த சேர்க்கை விகிதம் 38.2% என்ற அளவிற்கு அதிகரித்தது.பல்வேறு அரசுக் கல்லூரிகளில் உள்ள 1,100 காலி ஆசிரியப் பணியிடங்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக பூர்த்தி செய்யப்படும். சென்னையில் இயங்கும் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், புறநகர் பகுதியான காரப்பாக்கத்திற்கு மாற்றப்படும். அங்கே, அதற்காக, ரூ.95 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும்.அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட மாநிலத்தின் முக்கிய உயர்கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் மயிலாடுதுறையில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரியை ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கால்நடை மருத்துவ கலந்தாய்வில் ஆர்வத்துடன் மாணவர்கள் பங்கேற்பு கடந்த ஆண்டை விட கட் ஆப் மதிப்பெண் 2 அதிகரித்தது

கால்நடை மருத்துவ பொது கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ–மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
பொது கலந்தாய்வு
தமிழ்நாடு கால்நடை மருத்துவப்பல்கலைக்கழகம் சார்பில் சென்னை வேப்பேரியிலும், நாமக்கல்லிலும் அரசு கால்நடை மருத்துவக்கல்லூரிகள் உள்ளன.
இந்த கல்லூரிகளில் உள்ள பி.வி.எஸ்.சி. என்று அழைக்கப்படும் கால்நடை மருத்துவ படிப்பில் சேர மாற்றுத்திறனாளிகள் மற்றும் தொழில்கல்வி படித்த மாணவ–மாணவிகளுக்கு கலந்தாய்வு நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. நேற்று பொது கலந்தாய்வு நடத்தப்பட்டது. கலந்தாய்வில் ஏராளமான மாணவ–மாணவிகள் பெற்றோர்களுடன் கலந்துகொண்டனர்.
முதல் மாணவர்
முதல் மாணவராக நாமக்கல்லைச் சேர்ந்த வி.சரண்குமார் நாமக்கல் கால்நடைமருத்துவ கல்லூரியை தேர்ந்து எடுத்தார். அவர் எடுத்த கட் ஆப் மார்க் 198.25 இதே கட் ஆப் மதிப்பெண்ணில் இவரைத் தொடர்ந்து 4 பேர் எடுத்துள்ளனர். 2–வது மாணவர் எம்.கமலக்கண்ணன் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர். 3–வது மாணவர் எஸ்.மனோஜ் பிரபு நாமக்கல்லைச் சேர்ந்தவர். 4–வது இடம் பிடித்த மாணவி வி.அருள் மொழி தர்மபுரியைச் சேர்ந்தவர். 5–வது இடம் பெற்ற மாணவர் எம்.எஸ்.அஸ்வந்த் கோவையைச் சேர்ந்தவர்.
இந்த 4 பேர்களும் சென்னை வேப்பேரியில் உள்ள அரசு கால்நடை மருத்துவக்கல்லூரியை தேர்ந்து எடுத்தனர்.
கட் ஆப் அதிகரிப்பு
இவர்களுக்கு அடுத்தபடியாக 198 கட் ஆப் மார்க் பெற்ற 23 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில் 9 பேர் நாமக்கல் அரசு கால்நடை மருத்துவக்கல்லூரியையும், 14 பேர் வேப்பேரியில் உள்ள அரசு கால்நடை மருத்துவக்கல்லூரியையும் தேர்வு செய்தனர்.
நேற்று 219 இடங்களுக்கு 982 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் சில மாணவ–மாணவிகள் வரவில்லை. கடந்த ஆண்டு கால்நடை மருத்துவ படிப்பில் சேர்வதற்கு கட் ஆப் மார்க் இருந்ததை விட இந்த ஆண்டு கட் ஆப் மார்க் 2 உயர்ந்து உள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் இந்த வருடம் கால்நடை மருத்துவ படிப்பில் சேர்வதற்கு மாணவ–மாணவிகளிடையே ஆர்வம் அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று கலந்தாய்வு
இன்று (வெள்ளிக்கிழமை) உணவு தொழில்நுட்பம் படிப்பில் சேர 40 இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

25 மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள 128 குடியிருப்புப் பகுதிகளில் 128 புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

25 மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள 128 குடியிருப்புப் பகுதிகளில் 128 புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். 
கல்வியின் அடித்தளமாக விளங்குவது தொடக்கக் கல்வி என்பதைக் கருத்தில் கொண்டு, நடப்புக் கல்வியாண்டில், 25 மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் அதிகம் உள்ள 128 குடியிருப்புப் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தக் குடியிருப்புப் பகுதிகளில், தலா ஒரு தொடக்கப் பள்ளி வீதம் 128 புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்கப்படும்.  ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் ஓர் இடைநிலை ஆசிரியர் என மொத்தம் 256 ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள். 
நடப்பாண்டில் 19 மாவட்டங்களில் 42 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக, நிலை உயர்த்தப்படும் . இவ்வாறு நிலை உயர்த்தப்படும் ஒவ்வொரு பள்ளிக்கும் 3 பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் 126 ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படுவதோடு,
நடப்புக் கல்வியாண்டில், 50 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும்.  உயர்நிலைப் பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 50 தலைமை ஆசிரியர் பணியிடங்களும், 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் என மொத்தம் 300 ஆசிரியர் பணியிடங்கள் பணி நிரவல் மூலம் நிரப்பப்படும்.
நடப்புக் கல்வியாண்டில் 100 அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும். இவ்வாறு நிலை உயர்த்தப்படும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 100 தலைமை ஆசிரியர் பணியிடங்கள், ஒன்பது முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 1000 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்
வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ, வருவாய் இன்மை காரணமாக பள்ளியில் கல்வி கற்கும் அவர்களது குழந்தைகள் கல்வியை தொடர்ந்து கற்க இயலாத நிலை ஏற்படும் சமயத்தில், அவர்களது குழந்தைகள் தங்களது கல்வியை தொடர்ந்து கல்வி கற்கும் வகையில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ, மாணவியர், ஒவ்வொருவருக்கும் 50,000 ரூபாய் நிதி வழங்கும் திட்டம் 2005 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
இந்தத் தொகை இனி 75,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் 
தொலைதூர மற்றும் மலைப் பகுதிகளில் வாழும் நலிவடைந்த வகுப்பினைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் கல்வி வழங்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில், நடப்பாண்டில், 500 குழந்தைகள் பயன்பெறும் வகையில் 5 உண்டு உறைவிடப் பள்ளிகள் நீலகிரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அமைக்கப்படும். இப்பள்ளிகளுக்கு 5 முழு நேர ஆசிரியர்கள் மற்றும் 3 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.