அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 14 லட்சத்திற்கு மேற்பட்ட குழந்தைகள், தங்களுக்கு ஆங்கில வழிக்கல்வி வகுப்பு துவங்கப்படுமா? என்ற ஏக்கத்தில் உள்ளனர்.

 அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 14 லட்சத்திற்கு மேற்பட்ட குழந்தைகள், தங்களுக்கு ஆங்கில வழிக்கல்வி வகுப்பு துவங்கப்படுமா? என்ற ஏக்கத்தில் உள்ளனர். இவர்களைப் போலவே, பள்ளிகளின் நிர்வாகிகளும், அரசின் அனுமதியை எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர்.தமிழகத்தில், கடந்த 2011ம் ஆண்டு முதல் ஒவ்வொரு யூனியன் எல்லையிலும், தலா ஐந்து தொடக்கப் பள்ளிகளில், ஆங்கில வழி வகுப்பு துவங்கப்பட்டது. இத்திட்டம் படிப்படியாக, கடந்த கல்வியாண்டு முதல், உயர்நிலைப் பள்ளிகளிலும் அமல்படுத்தப்பட்டது. நடப்பு கல்வியாண்டில், சில அரசு பள்ளிகளில் ஆறு, ஒன்பது, பிளஸ் 1 (உயிரியல்) வகுப்பு, ஆங்கில வழிக் கல்வியில் துவங்கப்பட்டுள்ளது.இதற்காக, அரசு பள்ளிகளுக்கு, அரசின் சார்பில் கட்டடம், ஆசிரியருக்கு சம்பளம், பிற நலத்திட்டங்கள் போன்றவை கிடைக்கின்றன. அரசு உதவிபெறும் பள்ளிகளில், தமிழ் வழிக்கல்வி முறை மட்டுமே அமலில் உள்ளது. அரசு பள்ளியில் ஆங்கிலவழிக் கல்வி துவங்கப்பட்டு வருவதுபோல், அரசு உதவிபெறும் பள்ளியிலும், ஆங்கிலவழிக் கல்வி துவங்க அனுமதிக்க வேண்டும்.ஆங்கிலவழிக் கல்வியை போதிக்கும் அரசு பள்ளிகளுக்கு வழங்கும் சலுகைகளை, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும் என, அரசு உதவி பெறும் பள்ளிகளின் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், அரசு தரப்பில், அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கோ அல்லது தனியார் பள்ளிகளுக்கோ, புதியதாக எந்த சலுகையும் வழங்க முடியாது என, அரசு தெரிவித்துள்ளதாக கூறும் கல்வியாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது: தமிழகத்தில், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 5,071 தொடக்கப் பள்ளிகள், 1,608 நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. அதில் 40,748 ஆசிரியர்கள்; 14 லட்சத்து 23 ஆயிரத்து 615 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மட்டுமல்லாது, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் செயல்படுகின்றன. அரசு பள்ளியை போலவே, அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கும் நலத்திட்டம், ஆசிரியருக்கு சம்பளம் உள்ளிட்டவை வழங்க, கோடிக்கணக்கான ரூபாய் செலவழிக்கப்படுகிறது.ஆங்கில வழிக்கல்வி தேவை என அவர்கள் விருப்பப்பட்டால், சுயநிதி பள்ளியாக மாற்றிக் கொள்ள வேண்டியதுதான். கடந்த 1990 - 91ம் ஆண்டுக்கு முன், அரசு உதவி பெறும் பள்ளிகளில் என்ன நடைமுறை இருந்ததோ, அதே நடைமுறையைத்தான் பின்பற்ற வேண்டும் என, அன்றே உத்தரவிடப்பட்டது. தனியார் சார்ந்த கல்வி முறையை, அரசு ஊக்குவிக்க விரும்பவில்லை. மேலும், அரசு பள்ளிகளே, தற்போது தேவையான வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2008–2011–ம் வருட காலத்தில் தேர்ச்சி சதவீதம் 72 ஆக இருந்தது. அது 2010–2013–ம் ஆண்டு மார்ச் மாத காலத்தில் 47 ஆக குறைந்துள்ளது என்று இந்திய தணிக்கை துறை அறிவித்துள்ளது.

பாலிடெக்னிக் கல்லூரிகள்

தமிழ்நாட்டில் தொழில்நுட்ப கல்வி என்ஜினீயரிங் கல்லூரிகளிலும், பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் கற்பிக்கப்படுகிறது. என்ஜினீயரிங் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வு நடத்தி மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். ஆனால் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அந்தந்த கல்லூரிகளில் விண்ணப்பித்த மாணவர்களின் மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் நடக்கிறது.
தொழில்நுட்ப கல்விக்காக 11–வது ஐந்தாண்டு திட்டத்தில் ரூ.241 கோடியே 60 லட்சம் ஒதுக்கப்பட்டது. அதில் பாலிடெக்னிக் கல்லூரிகளின் வளர்ச்சிக்காக மட்டும் ரூ.14 கோடியே 78 லட்சம் ஒதுக்கப்பட்டது.
மாணவர் சேர்க்கையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 5 முதல் 11 சதவீதம் வரையிலும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 6 முதல் 15 சதவீதமும் குறைவாகவும் இருந்தது. மாதிரி ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருந்தன. அதுபோல விடுதியில் தங்கும் மாணவர்களின் எண்ணிக்கையை விட அதிக மாணவர்கள் தங்கி இருந்தனர். அதாவது 74 சதவீத மாணவர்கள் அதிகமாகவும், 94 சதவீத மாணவிகள் கூடுதலாகவும் இருந்தது கண்டறியப்பட்டது.
தேர்ச்சி சதவீதம் குறைந்தது
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்களின் தேர்ச்சி வீதம் 2008–2011–ம் ஆண்டுகளில் 72 சதவீதமாக இருந்தது. ஆனால் அந்த சதவீதம் 2010–2013–ம் ஆண்டு 47 சதவீதமாக குறைந்துள்ளது (25 சதவீதம் குறைந்துள்ளது). 7 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 154 ஆய்வகங்களுக்கு பதிலாக 104 ஆய்வகங்கள் மட்டுமே இருந்தன. அதாவது 49 ஆய்வகங்கள் குறைவாக இருந்தன.
இந்த தகவலை இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை தெரிவித்துள்ளது.

உலக கணித அமைப்பு நடத்திய பரி்சோதனையில், தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி, சர்வதேச சாம்பியன் பட்டம் வென்றார் ஈரானிய நாட்டை சேர்ந்த பெண்ணான மரியம் மிர்ஸாகனி.

உலகளவில் கணித்தில் சிறந்தவர்களை தேர்ந்தெடுப்பதற்கான போட்டிகள் நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. இதனை சர்வதேச கணித அமைப்பு நடத்தி வருகிறது. இறுதிப்போட்டிக்கு நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டு அதில் சிறந்து விளங்குபவர்களுக்கு சர்வதேச விருது வழங்கப்படுவது வழக்கம். இந்தாண்டு அதற்கான போட்டி தென் கொரியா தலைநகர் சியோலில் நடைபெற்றது.இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் சர்வதேச அளவிலான முதல் பரிசை தட்டிச் சென்றார் ஈரான் நாட்டை சேர்ந்த மரியம் மிர்ஸா கனி என்பவர் .மேலும் ஈரான் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் இது போன்ற பரிசை வெல்வது இதுவே முதல்முறையாகும். இந்த விருது கணிதத்தில் நோபல் பரிசு என கருதப்படுகிறது.கடந்த 1977-ம் ஆண்டு ஈரான் தலைநகர் டெஹ்ரானில் பிறந்தார். தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைகழகத்தில் கணித பேராசிரியராக பணி புரிந்து வருகிறார்.சர்வதேச கணித அமைப்பு நடத்திய போட்டியில் சமர்ப்பிக்கப்பட்ட தனது ஆய்வுக்கட்டுரையில், கணித நுட்பங்களை பல்வேறு வரம்புகளில் தொழில்நுட்பத்திறன் , தொலைநோக்குபார்வை ஆகிய சேர்க்கையை உள்ளடக்கிய அறி்க்கையை சமர்ப்பித்திருந்தார். இதனை ஆய்வு செய்த போட்டியின் நடுநிலையாளர்கள், முதல் பரிசுக்கான விருதை இவருக்கு வழங்கியுள்ளனர்.ஏற்கனவே கணிதத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளை நடத்தி வரும் இவர், கடந்த 2013-ம் ஆண்டு அமெரிக்க கணித சங்கம் நடத்திய ஷாட்டர் பரிசுக்கான விருதையும், 2009-ம் ஆண்டு புளுமெந்தால் விருதையும் பெற்றுள்ளார்.மேலும் தற்போது நடந்து முடிந்துள்ள போட்டியில் மரியம் மிர்ஸாகனியுடன், பிரான்சின் ஆர்தர் அவிலா நியூஜெர்சி, பிரின்ஸ்டன் பல்கலைகழகத்தை சேர்ந்த மஞ்சுல் பார்கவா, பிரிட்டனின் வார்விக் பல்கலை.,யை சேர்ந்த மார்ட்டின் ஆகியோர் பகிர்ந்து கொண்டுள்ளனர்.போட்டியின் வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள மரியம், "இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும், மற்ற பெண் அறிவியல், கணித விஞ்ஞானிகளுக்கு ஊக்கமளிப்பதாகவும் அமையும் எனவும், வரும் காலங்களில் போட்டியில் பங்கேற்கும் பெண்களுக்கு வழிகாட்டியாக இருக்கும்" தெரிவித்துள்ளார்.