அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2,000 உதவி பேராசிரியரை நியமனம் செய்வதற்கான பட்டியல், மூன்று மாதங்களுக்குள் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) தெரிவித்தது.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2,000 உதவி பேராசிரியரை நியமனம் செய்வதற்கான பட்டியல், மூன்று மாதங்களுக்குள் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) தெரிவித்தது.
முதலில், 1,060 உதவி பேராசிரியரை நியமனம் செய்வதற்கான பணியை, ஆசிரியர் தேர்வு வாரியம் செய்தது. இதற்கு 14 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். தகுதியானவர்களுக்கு, சமீபத்தில், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி, அதன்பின், நேர்முகத் தேர்வையும் நடத்தியது.
இந்நிலையில், மொத்த காலி பணி இடங்கள் எண்ணிக்கை 2,000 ஆக உயர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து, டி.ஆர்.பி., அதிகாரி ஒருவர் கூறுகையில், "2,000 உதவி பேராசிரியர் பணிக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர் பட்டியல், மூன்று மாதங்களுக்குள் வெளியிடப்படும்" என தெரிவித்தார்.

மறுநிர்மாணம் செய்யப்பட்ட உலகப் புகழ்பெற்ற நாளந்தா பல்கலைக்கழகம், செப்டம்பர் 1ம் தேதி தனது முதல் வகுப்பறை செயல்பாட்டைத் துவக்கியது.

மறுநிர்மாணம் செய்யப்பட்ட உலகப் புகழ்பெற்ற நாளந்தா பல்கலைக்கழகம், செப்டம்பர் 1ம் தேதி தனது முதல் வகுப்பறை செயல்பாட்டைத் துவக்கியது.
தற்போதைக்கு, ஸ்கூல் ஆப் எகாலஜி அன்ட் என்விரன்மென்டல் ஸ்டடீஸ் மற்றும் ஸ்கூல் ஆப் ஹிஸ்டாரிகல் ஸ்டடீஸ் ஆகிய துறைகளில், சாதாரண முறையில் வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன.
மேலும், இப்போது, பல்கலை வளாகத்தில் 15 மாணவர்களும், 11 ஆசிரியர்களும் உள்ளனர் என்று நாளந்தா பல்கலை துணைவேந்தர் கோபா சபர்வால் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: தொடக்கத்தில் சாதாரண முறையில் வகுப்புகள் துவக்கப்படுவதற்கு காரணம், ஆசிரியர்களும், மாணவர்களும் புதிய சூழலில் பழகிக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். இப்பல்கலைக்கு, மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், வரும் செப்டம்பர் 14ம் தேதி வருகைத்தர உள்ளார்.
அப்போது பெரியளவிலான நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் பல்கலையில் அனைத்து அம்சங்களும் ஒழுங்குபட்டிருக்கும் மற்றும் மீடியா கவனமும் எங்கள் மீது அதிகரித்திருக்கும்.
ஆகஸ்ட் 31ம் தேதி, மாணவர்களின் 3 நாள் ஓரியன்டேஷன் நிகழ்ச்சியை பல்கலைக்கழகம் நிறைவு செய்தது. உலகின் 40 நாடுகளிலிருந்து 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள், பல்வேறு பாடப்பிரிவுகளில், சேர்க்கைக்காக இப்பல்கலைக்கு விண்ணப்பித்தனர். ஆனால், அவர்களில், 15 பேர் மட்டுமே (ஜப்பான் மற்றும் பூடானிலிருந்து தலா ஒருவர்) தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
இப்பல்கலை வளாகம் அமைந்த ராஜ்கிர் என்ற இடம், பீகாரில் அமைந்துள்ள புத்தகயா என்ற பெளத்த புனித ஸ்தலத்திற்கு அடுத்து, இரண்டாவது பெளத்த மத முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். இப்பல்கலைக்கு, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகள் பல்வேறான நிதியுதவியை அளித்துள்ளன மற்றும் அளிக்கவுள்ளன.
இதோடு சேர்த்து, இந்திய அரசாங்கம், 10 ஆண்டு காலகட்டத்திற்கு, ரூ.2,700 கோடியை ஒதுக்கியுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

தமிழகத்தில் 17 அரசு நர்சிங் கல்லுாரிகளில், முதல்வர் பணியிடங்கள் ஓராண்டுக்கும் மேலாக நிரப்பப்படாததால், செயல்பாடுகளில் தள்ளாட்டம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 17 அரசு நர்சிங் கல்லுாரிகளில், முதல்வர் பணியிடங்கள் ஓராண்டுக்கும் மேலாக நிரப்பப்படாததால், செயல்பாடுகளில் தள்ளாட்டம் ஏற்பட்டுள்ளது. அரசு, இதில் கவனம் செலுத்தவில்லையே என மாணவர்கள் புலம்புகின்றனர்.
தமிழகத்தில் 23 அரசு நர்சிங் கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஆண்டுதோறும் 3,000 பேர் படிக்கின்றனர். 23 கல்லுாரிகளில், தற்போது ஆறு கல்லுாரிகளில் மட்டுமே முதல்வர்கள் உள்ளனர். மீதமுள்ள 17 கல்லுாரிகளில், முதல்வர் பணியிடங்கள் ஓராண்டுக்கும் மேலாக காலியாக உள்ளன.
இதனால், தேவையானவற்றை தீர்மானித்தல், முக்கிய முடிவுகளை எடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது. பெரும்பாலான கல்லுாரிகளில், நிர்வாகப் பணிகளை துணை முதல்வர், மூத்த ஆசிரியர்கள் செய்வதால், அவர்களின் வழக்கமான பணிகள், கல்வி போதிக்கும் பணிகளும் பாதிக்கும் சூழல் உள்ளது.
அரசு ஏனோ, இந்த கல்லுாரிகள் மீது போதிய கவனம் செலுத்தவில்லை. டிப்ளமோ நர்சிங் கலந்தாய்வு, அடுத்த வாரம் துவங்குகிறது. விரைவில், முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்கும் நிலையில், இனியாவது காலியாக உள்ள முதல்வர் இடங்களை நிரப்ப வேண்டும் என நர்சிங் மாணவர்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.
சுகாதாரத் துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "முதல்வர் இல்லாத நர்சிங் கல்லுாரிகளை, துணை முதல்வர்கள் கண்காணித்து வருகின்றனர். காலியாக உள்ள முதல்வர் பணியிடங்களை நிரப்ப, தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயாரித்து, அரசுக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளது" என்றார்.