இந்தாண்டு பல்வேறு கல்லூரிகளில் வளாக நேர்காணலுக்கு வந்த சில முக்கிய நிறுவனங்கள்

தமிழகத்தின் பொறியியல் கல்லூரிகளை நோக்கி ஐ.டி. நிறுவனங்கள் செல்வது இந்தாண்டு அதிகரித்துள்ளது. கடந்தாண்டைவிட, 2 மடங்கு மாணவர்கள் அந்நிறுவனங்களால் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் பொறியியல் மாணவர்களுக்கான பணி வாய்ப்புகள் சற்று மந்தமாக இருந்த நிலையில், இந்தாண்டு நிலைமை மாறியுள்ளது. ஐ.டி. நிறுவனங்களின் மூலம் பணி வாய்ப்புகளைப் பெற்றவர்கள், கடந்தாண்டைவிட, இந்தாண்டு, இரண்டு மடங்கு அதிகம்.அவர்களுக்கான சம்பளம் ஆண்டிற்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.3.5 லட்சம் வரை இருக்கிறது.வேலூரின் VIT கல்வி நிறுவனத்தில், 4 பன்னாட்டு நிறுவனங்களின் மூலம், மொத்தம் 5,828 மாணவர்கள் பணி வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். கடந்தாண்டை ஒப்பிடுகையில், இது 90% அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில் 490 மாணவர்களுக்கு பணி வாய்ப்புகள் கிடைத்துள்ளன.மென்பொருள் மற்றும் சேவைகள் நிறுவனங்களின் தேசிய அமைப்பு(NASSCOM), இந்த 2014-15ம் ஆண்டில் மட்டும், புதிய பட்டதாரிகளுக்கு, ஐ.டி. துறையில் சுமார் 30,000 பணி வாய்ப்புகள் கிடைக்கும் என்று கணித்துள்ளது.வேலூரின் VIT கல்வி நிறுவனத்தில் மட்டும், மொத்தம் 1,911 மாணவர்களை பணிக்கு தேர்வு செய்துள்ளது Cognizant நிறுவனம். இதுவொரு அதிகபட்ச அளவாகும். தஞ்சையிலுள்ள சாஸ்த்ரா பல்கலையில், கடந்த வாரம் 1,212 மாணவர்கள், TCS உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்கள் மூலம் பணி வாய்ப்புகளைப் பெற்றனர்.பெரிய அளவிலான ஆளெடுப்பு பணிகள், முதல்நிலை கல்வி நிறுவனங்களில் தொடங்கியுள்ளது. அடுத்து, இரண்டாம் நிலை கல்லூரிகளை நோக்கி அது நகரவுள்ளது. முக்கியமான அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள், செப்டம்பர் 3ம் வாரத்தில் ஆளெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கின்றன.மேற்கூறிய கல்வி நிறுவன மாணவர்கள், பணி வாய்ப்புகளைப் பெற்றாலும், அவர்களின் ஊதியம், ஐ.ஐ.டி. போன்ற கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் பெறும் ஊதியத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவே. இவர்களின் சராசரி ஊதியம் பெரும்பாலும், ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.3.5 லட்சம் வரையிலேயே இருக்கிறது.கடந்த 2013ம் ஆண்டில், ஐ.ஐ.டி., சென்னையில் பணி வாய்ப்பை பெற்ற ஒரு மாணவர் பெற்ற ஊதியம் ரூ.1 கோடிக்கும் மேல்! இந்தாண்டு VIT -ல் ஒரு மாணவர் பெற்ற அதிகபட்ச ஊதியம் ரூ.23 லட்சம். அதேபோன்று, தஞ்சை சாஸ்த்ரா பல்கலை மாணவர் பெற்ற அதிகபட்ச சம்பளம் ரூ.17.25 லட்சம். ராஜலட்சுமி பொறியில் கல்லூரி மாணவருக்கான அதிகபட்ச சம்பளம் ரூ.7.50 லட்சம்.பொதுவாகவே, பெரிய நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட பணிக்காக மாணவர்களை எதிர்பார்த்து பணியமர்த்துகின்றன. ஐ.ஐ.டி. போன்ற கல்வி நிறுவனங்களில், அவர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப மாணவர்கள் கிடைக்கிறார்கள். எனவேதான், அவர்களுக்கு மிக அதிக சம்பளம் கிடைக்கிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இந்தாண்டு பல்வேறு கல்லூரிகளில் வளாக நேர்காணலுக்கு வந்த சில முக்கிய நிறுவனங்கள்
Cognizant, TCS, Wipro, IBM, Accenture, Code Nation, Paypal, Ashok Leyland, Dell, Whirlpool, Amazon, TVS Motors, Microsoft, Avnet, Freshdesk, Lister, Flipkart and Deshaw etc...

நாட்டில் சிறுபான்மையினர் நடத்தும், சில கல்வி நிறுவனங்களில் கூட்டம் குவிவதைத் தவிக்க, தரமான ஆரம்ப பள்ளிகளை உருவாக்க, அரசு பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கல்விபெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், மாணவர்கள் சேர்க்கையை நடத்தும்படி, சில பள்ளிகளுக்கு, கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இந்த உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் தவே மற்றும் லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்ததாவது: மருத்துவ கல்லூரிகளை எடுத்துக் கொண்டால், அரசு மருத்துவ கல்லூரிகளுக்கே மவுசு அதிகம் உள்ளது.அங்கு சேரவே பெரும்பாலான மாணவர்கள் விரும்புகின்றனர். அதேநேரத்தில், தனியார் கல்லூரிகள் எல்லாம் வர்த்தக நோக்கத்தில் செயல்படுகின்றன. அரசால் நடத்தப்படும் மருத்துவ கல்லூரிகள், சிறப்பாக செயல்பட முடிகின்றன என்றால், ஏன் சிறந்த ஆரம்ப பள்ளிகளை அரசால் உருவாக்க முடியாது. சிறந்த ஆரம்ப பள்ளிகளை, அதிக அளவில் கொண்டிருக்க வேண்டியது அரசின் கடமை.எனவே, சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில், மாணவர்கள் குவிவதைத் தடுக்க, சிறந்த ஆரம்ப பள்ளிகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கோவை, திருப்பூர், தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட 19 மாவட்டங்களில், 1,287 மலைப்பிரதேச கிராமங்களில் உள்ள மாணவர்கள், ஜீப், ஆட்டோ போன்ற வாகனங்களில் பள்ளிகளுக்குச் செல்லவும், தேவையான குழந்தைகளுக்கு, உடன் பாதுகாவலர்கள் செல்லவும் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

கோவை, திருப்பூர், தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட 19 மாவட்டங்களில், 1,287 மலைப்பிரதேச கிராமங்களில் உள்ள மாணவர்கள், ஜீப், ஆட்டோ போன்ற வாகனங்களில் பள்ளிகளுக்குச் செல்லவும், தேவையான குழந்தைகளுக்கு, உடன் பாதுகாவலர்கள் செல்லவும் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.நடப்பு கல்வி ஆண்டில், 14,749 பேர் இந்த வசதியை பெறுகின்றனர். தனியார் பள்ளிகள், மலைவாழ் பகுதிகளில் உள்ள மாணவர்களின் கல்வி குறித்து, சிந்திப்பது கூட கிடையாது. போதிய சாலை வசதி இல்லாத, அடர்ந்த காடுகளுக்கு நடுவே உள்ள, சின்ன சின்ன கிராமங்களில் வாழும் குழந்தைகள், கல்வி பயில வேண்டும் என்பதற்காக, தமிழக அரசு, சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.மலைப்பிரதேச பகுதிகளில் உள்ள சிறுவர்கள், பள்ளிகளுக்குச் செல்வதில் உள்ள பிரச்னைகளை அறிந்த தமிழக அரசு, மாணவர்கள், பாதுகாப்புடன் பள்ளிகளுக்குச் செல்வதை உறுதிபடுத்தும் வகையில், வாகன வசதி திட்டத்தை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது.19 மாவட்டங்கள்: இந்த திட்டத்தால், கடந்த ஆண்டு 10 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்தனர். நடப்பு கல்வி ஆண்டில், கோவை, திருப்பூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, தஞ்சாவூர், நாமக்கல், சேலம், நாகை, தேனி, நீலகிரி, நெல்லை, திருவண்ணாமலை, திருவள்ளூர், வேலூர் ஆகிய 19 மாவட்டங்களில் 1,287 சிறு சிறு பகுதிகள் அடையாளம் காணப்பட்டன. இந்த கிராமங்களில் வசிக்கும் 14,749 குழந்தைகள், எந்த பிரச்னையும் இன்றி, வாகனங்களில் பள்ளி சென்றுவர, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனரகம் ஏற்பாடு செய்துள்ளது.மலை பகுதிகளில் உள்ள கிராமங்களும், பள்ளிகளும், அருகருகே உள்ளன. மேற்கண்ட மாவட்டங்களில் 473 ஆரம்பப் பள்ளிகளும், 182 அரசு நடுநிலைப் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. எட்டாம் வகுப்பு வரையிலான படிப்பிற்கு, இந்த அரசு பள்ளிகளை நம்பித் தான் மலைவாழ் பகுதி மாணவர்கள் உள்ளனர்.இவர்கள், உரிய பாதுகாப்புடன் பள்ளிகளுக்கு சென்றுவர வேண்டும் என்பதற்காக, அந்த பகுதிகளில் உள்ள ஆட்டோ, ஜீப் போன்ற வாகனங்கள் மூலம் பள்ளி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கூடுதலாக, தேவையான மாணவர்களுக்கு பாதுகாப்பாக, உடன் ஒருவர் செல்லவும், தமிழக அரசு அனுமதித்துள்ளது. இதற்காக, பாதுகாவலர்களுக்கு மாதம் 250 ரூபாய் வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது..4.42 கோடி நிதி: மாணவர்களின் வாகன செலவுக்காக, ஒரு ஆண்டுக்கு தலா 3,000 ரூபாய் ஒதுக்கப்படுகிறது. அதன்படி, நடப்பாண்டில், 4.42 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. அனைவருக்கும் கல்வி திட்ட நிதியில் இருந்து, இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: கிராம வாரியாக, மாணவர் எண்ணிக்கை வாரியாக கணக்கெடுப்பு நடத்தி, அதன் விவரம் தற்போது அரசு கெஜட்டில் வெளியிடப்பட்டுள்ளது. இதை, மத்திய அரசுக்கு அனுப்பி, உரிய நிதி பெறப்படும். மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும், வாகன வசதி, பாதுகாவலர் வசதி செய்யப்படுகிறது. நடப்பாண்டில் 9,595 மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தலா, 5,000 ரூபாய் செலவில், வாகன வசதி மற்றும் பாதுகாவலர் வசதி செய்யப்படுகிறது. இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.