பள்ளி மாணவர்களுக்கு செல்போன் மூலம் பாடங்களை எளிமையாகக் கற்பித்து வரும் சென்னை மாநகராட்சிப் பள்ளி ஆசிரியைக்கு சர்வதேச விருது கிடைத்துள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு செல்போன் மூலம் பாடங்களை எளிமையாகக் கற்பித்து வரும் சென்னை மாநகராட்சிப் பள்ளி ஆசிரியைக்கு சர்வதேச விருது கிடைத்துள்ளது.
செல்போனைப் பயன்படுத்தி மாணவர்கள் சுலபமாகப் புரிந்துகொள்ளும் வகையில் பாடங்களைக் கற்பித்து வருகிறார் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சென்னை உருது பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை ஜி.ஜரீனா பானு. கற்றலில் புதுமையைப் புகுத்தி வருவதற்காக  இவருக்கு, ‘குளோபல் பிரிட்ஜ் ஐடி என்ற சர்வதேச விருது கிடைத்திருக்கிறது.
அமெரிக்காவின் பியர்ஸன் ஃபவுண்டேஷன் அமைப்பு உருவாக்கியுள்ள பிரிட்ஜ் ஐடி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, செல்போன் மூலம் எங்கள் பள்ளியில் ஐந்து மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம், அறிவியல் பாடங்களை கற்பித்து வருகிறோம். மாணவர்களின் பாடத் திட்டத்துக்கு ஏற்ற வீடியோ படங்கள் ஆடியோ வசனங்களுடன் செல்போனில் இணைத்துத் தந்திருக்கிறார்கள்.  இந்த செல்போனை எங்கள் பள்ளியில் இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியுடன் இணைத்து, அதன் மூலம் பாடம் சம்பந்தப்பட்ட வீடியோக்களையும், இணையத்தில் கிடைக்கும் தகவல்களையும் பயன்படுத்தி பாடங்களை நடத்தி வருகிறோம். இதனால் மாணவர்கள் ஆர்வத்துடன் பாடங்களைக் கற்றுக் கொள்கிறார்கள். நன்றாகப் படிக்கும் மாணவர்கள் மேலும் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்று வருகிறார்கள். சராசரியாகப் படிக்கும் மாணவர்கள் நன்றாகப் படித்து வருகிறார்கள். சரிவரப் படிக்காத மாணவர்கள், தேர்ச்சியடையும் அளவுக்கு படிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்" என்று பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார் ஆசிரியை ஜரீனா பானு. 
பிரிட்ஜ்  ஐடி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செல்போன் மூலம் மாணவர்களுக்கு கற்பிப்பதற்காக ‘ஈசி வித்யா அமைப்பு’ பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறது. இப்பயிற்சியைப் பெற்ற ஆசிரியை ஜரீனா பானு, இதை மிகச் சிறப்பான முறையில் பயன்படுத்தி மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்து வருவதற்காக பியர்ஸன் ஃபவுண்டேஷன் அமைப்பின் குளோபல் பிரிட்ஜ் ஐடி விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதில் சான்றிதழும், நினைவுப் பரிசும், ரூ.10,000 ரொக்கப் பரிசும் அடங்கும்.
செல்போனைப் பயன்படுத்தி பாடம் கற்பிக்கும் முறை பற்றி நம்மிடம் விவரித்தார் ஜரீனா பானு.
அறிவியலில் உணவுச் சங்கிலி என்றொரு பாடம் உள்ளது. இந்தப் பாடத்தின்படி, புல்லை மான்கள் உண்ணும், மான்களை கரடி, புலி போன்றவை உண்ணும் என்பது போன்ற தகவல்கள் வரும். இதை வெறுமனே  பாடமாக நடத்தினால் மாணவர்களுக்கு போரடித்துவிடும். செல்போனில் உள்ள வீடியோ காட்சிகளைப் பயன்படுத்தி மான்கள் புல் சாப்பிடும் காட்சியையும், புலிகள் மான்கள் போன்ற விலங்குகளை வேட்டையாடி உண்ணும் காட்சியையும் டி.வி.யில் காண்பித்து விளக்கும்போது மாணவர்கள் எளிதில் கற்றுக் கொள்கிறார்கள். இப்படி ஆங்கில இலக்கணத்தையும் விளையாட்டுப்போல வீடியோ காட்சிகள், ஆடியோ ஒலிகள் மூலம் கற்பிக்கிறோம். மாணவர்கள் மிகவும் ரசித்துப் படிக்கிறார்கள். எனக்குக் கிடைத்துள்ள இந்த விருது, மேலும் உற்சாகத்துடன் பணியாற்ற என்னை ஊக்குவித்துள்ளது. இது எங்கள் பள்ளி ஆசிரியைகள், தலைமை ஆசிரியை அத்தியா பாத்திமா, மாநகராட்சி அதிகாரிகள் ஆகிய அனைவரின் ஒத்துழைப்பால் கிடைத்த ஒன்று" என்று மகிழ்கிறார் ஜரீனா பானு.

மலைகிராம பள்ளிகளுக்கு செல்லாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

திண்டுக்கல்: மலை கிராம பள்ளிகளுக்கு சரியாக செல்லாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித்துறை எச்சரித்துள்ளது.திண்டுக்கல், தேனி, தர்மபுரி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மலைக்கிராம பள்ளிகள் அதிகளவில் உள்ளன. ரோடு வசதி இல்லாததால், மலைகிராம பள்ளிகளுக்கு பல கி.மீ., தூரத்திற்கு நடந்து செல்ல வேண்டியுள்ளது.சில பள்ளிகளுக்கு குதிரை மூலம் மட்டுமே செல்ல முடிகிறது. இதனால், கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிகளை ஆய்வு செய்வதில்லை. மொபைல் போன் சிக்னல் -ம் சரியாக கிடைக்காததால், ஆசிரியர்களை தொடர்பு கொள்வதிலும் சிரமம் உள்ளது. இதை பயன்படுத்தி சில ஆசிரியர்கள் சரியாக பள்ளிகளுக்கு செல்வதில்லை.அதேபகுதியை சேர்ந்த படித்த இளைஞர்கள் மூலம் பாடம் நடத்தசொல்லி, அவர்களுக்கு குறிப்பிட்ட தொகையை கொடுக்கின்றனர். இதனால் மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல், காடுகளில் வேலைக்கு சென்றுவிடுவதாக புகார் எழுந்தது.இதையடுத்து, மலைகிராம பள்ளிகளுக்கு சென்று ஆய்வுநடத்த வேண்டும். வனவிலங்கு நடமாட்டம் உள்ள பகுதிகளில் குறிப்பிட்ட நேரமாவது பள்ளிகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சரியாக பள்ளிக்கு செல்லாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.