கால்நடை மருத்துவ பொது கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ–மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
பொது கலந்தாய்வு
தமிழ்நாடு கால்நடை மருத்துவப்பல்கலைக்கழகம் சார்பில் சென்னை வேப்பேரியிலும், நாமக்கல்லிலும் அரசு கால்நடை மருத்துவக்கல்லூரிகள் உள்ளன.
இந்த கல்லூரிகளில் உள்ள பி.வி.எஸ்.சி. என்று அழைக்கப்படும் கால்நடை மருத்துவ படிப்பில் சேர மாற்றுத்திறனாளிகள் மற்றும் தொழில்கல்வி படித்த மாணவ–மாணவிகளுக்கு கலந்தாய்வு நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. நேற்று பொது கலந்தாய்வு நடத்தப்பட்டது. கலந்தாய்வில் ஏராளமான மாணவ–மாணவிகள் பெற்றோர்களுடன் கலந்துகொண்டனர்.
முதல் மாணவர்
முதல் மாணவராக நாமக்கல்லைச் சேர்ந்த வி.சரண்குமார் நாமக்கல் கால்நடைமருத்துவ கல்லூரியை தேர்ந்து எடுத்தார். அவர் எடுத்த கட் ஆப் மார்க் 198.25 இதே கட் ஆப் மதிப்பெண்ணில் இவரைத் தொடர்ந்து 4 பேர் எடுத்துள்ளனர். 2–வது மாணவர் எம்.கமலக்கண்ணன் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர். 3–வது மாணவர் எஸ்.மனோஜ் பிரபு நாமக்கல்லைச் சேர்ந்தவர். 4–வது இடம் பிடித்த மாணவி வி.அருள் மொழி தர்மபுரியைச் சேர்ந்தவர். 5–வது இடம் பெற்ற மாணவர் எம்.எஸ்.அஸ்வந்த் கோவையைச் சேர்ந்தவர்.
இந்த 4 பேர்களும் சென்னை வேப்பேரியில் உள்ள அரசு கால்நடை மருத்துவக்கல்லூரியை தேர்ந்து எடுத்தனர்.
கட் ஆப் அதிகரிப்பு
இவர்களுக்கு அடுத்தபடியாக 198 கட் ஆப் மார்க் பெற்ற 23 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில் 9 பேர் நாமக்கல் அரசு கால்நடை மருத்துவக்கல்லூரியையும், 14 பேர் வேப்பேரியில் உள்ள அரசு கால்நடை மருத்துவக்கல்லூரியையும் தேர்வு செய்தனர்.
நேற்று 219 இடங்களுக்கு 982 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் சில மாணவ–மாணவிகள் வரவில்லை. கடந்த ஆண்டு கால்நடை மருத்துவ படிப்பில் சேர்வதற்கு கட் ஆப் மார்க் இருந்ததை விட இந்த ஆண்டு கட் ஆப் மார்க் 2 உயர்ந்து உள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் இந்த வருடம் கால்நடை மருத்துவ படிப்பில் சேர்வதற்கு மாணவ–மாணவிகளிடையே ஆர்வம் அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று கலந்தாய்வு
இன்று (வெள்ளிக்கிழமை) உணவு தொழில்நுட்பம் படிப்பில் சேர 40 இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது.