தமிழகத்தில் நடக்கும் ஆசிரியர் தின விழா பெயரில், எவ்வித மாற்றமும் கிடையாது; வழக்கம்போல் இந்த ஆண்டும், ஆசிரியர் தின விழா, வரும் 5ம் தேதி சிறப்பாக கொண்டாடப்படும் என கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.

தமிழகத்தில் நடக்கும் ஆசிரியர் தின விழா பெயரில், எவ்வித மாற்றமும் கிடையாது; வழக்கம்போல் இந்த ஆண்டும், ஆசிரியர் தின விழா, வரும் 5ம் தேதி சிறப்பாக கொண்டாடப்படும் என கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.
முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்., 5ம் தேதி, தேசிய அளவில், ஆசிரியர் தின விழாவாக கொண்டாடப்படுகிறது. சிறப்பாக பணிபுரியும் ஆசிரியருக்கு, மத்திய, மாநில அரசுகள், விருதுகளை வழங்குகின்றன.
இந்நிலையில், ஆசிரியர் தின விழா பெயரை, சமீபத்தில் குரு உத்சவ் என மாற்றி, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டதாக தகவல் வெளியானது. மாநில அரசுகளும், புதிய பெயரில் விழாவை கொண்டாட வேண்டும் என, மத்திய அரசு அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
வரும் 5ம் தேதி மாநில அரசுகளும், மத்திய அரசும், சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்க உள்ளது. தமிழகத்திலும், விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
இந்நிலையில், பெயர் மாற்றம் தமிழகத்தில் அமலுக்கு வருமா? என்பது குறித்து, கல்வித்துறை வட்டாரம் தெரிவித்ததாவது: பெயர் மாற்றம் குறித்து, தமிழக அரசு, கல்வித் துறைக்கு எவ்வித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. எனவே, வழக்கம்போல் தான், விழா நடக்கும்.
வரும் 5ம் தேதி சென்னை, சேத்துப்பட்டில் உள்ள கிறிஸ்தவ மேல்நிலைப் பள்ளியில் நடக்கும் விழாவில், 377 ஆசிரியர்களுக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட உள்ளது. பள்ளிகல்வி அமைச்சர் வீரமணி, விருதுகளை வழங்குகிறார். இவ்வாறு கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2,000 உதவி பேராசிரியரை நியமனம் செய்வதற்கான பட்டியல், மூன்று மாதங்களுக்குள் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) தெரிவித்தது.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2,000 உதவி பேராசிரியரை நியமனம் செய்வதற்கான பட்டியல், மூன்று மாதங்களுக்குள் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) தெரிவித்தது.
முதலில், 1,060 உதவி பேராசிரியரை நியமனம் செய்வதற்கான பணியை, ஆசிரியர் தேர்வு வாரியம் செய்தது. இதற்கு 14 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். தகுதியானவர்களுக்கு, சமீபத்தில், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி, அதன்பின், நேர்முகத் தேர்வையும் நடத்தியது.
இந்நிலையில், மொத்த காலி பணி இடங்கள் எண்ணிக்கை 2,000 ஆக உயர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து, டி.ஆர்.பி., அதிகாரி ஒருவர் கூறுகையில், "2,000 உதவி பேராசிரியர் பணிக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர் பட்டியல், மூன்று மாதங்களுக்குள் வெளியிடப்படும்" என தெரிவித்தார்.