பயன்படாது போகின்றனவா மாணவர்களுக்கான நடமாடும் உளவியல் மையங்கள்

மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்றபடி அல்லாமல், சொற்ப எண்ணிக்கையில், உளவியல் நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், நடமாடும் உளவியல் மையம் பயனின்றி போவதாக, பள்ளி ஆசிரியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
பள்ளி மாணவர்களின் மன அழுத்தம், உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் பொருட்டு, நடமாடும் உளவியல் ஆலோசனை மையம், தமிழகத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
இதற்காக, தமிழகத்தில் 10 மண்டலங்கள் பிரிக்கப்பட்டு, ஒரு மண்டலத்தில் குறைந்தபட்சம் மூன்று மாவட்டங்களும், அதிகபட்சமாக நான்கு மாவட்டங்களும் அடங்கும். ஒவ்வொரு மண்டலத்திற்கும், தலா ஒரு உளவியல் ஆலோசகர் வீதம் மொத்தம் 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், மூன்று பெண்களும், ஏழு ஆண் உளவியல் நிபுணர்களும் உள்ளனர்.
கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களை ஒருங்கிணைத்து, ஒரு மண்டலமாக பிரித்து, மாணவ, மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, மாநிலம் முழுவதும் தேர்வில் தேர்ச்சி பெறுவது எப்படி என்பது குறித்து மட்டுமே 80 சதவீத ஆலோனைகள் வழங்கப்படுகிறது.
பாலியல் வன்கொடுமை பாதுகாப்பு, உடல்ரீதியான மாற்றங்கள் போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வுகாண, உளவியல் நிபுணர்கள் அமர்த்தப்பட்டாலும், அதில் பெரிதாக பலனில்லை என்பதே உண்மை.
ஆண் உளவியல் நிபுணர்கள் பணியமர்த்தப்பட்டுள்ள மண்டலங்களில் மாணவிகளும், பெண் உளவியல் நிபுணர்கள் உள்ள மண்டலங்களில் மாணவர்களும், தங்கள் பாலியல் ரீதியான குழப்பங்களுக்கு விளக்கங்களை வெளிப்படையாக கேட்கவும், தெரிந்து கொள்ளவும் தயங்குகின்றனர்.
மேலும், இதுபோன்ற மாணவர்களுக்கு தொடர் கவுன்சிலிங் வழங்க வேண்டியது அவசியம். ஆனால், மூன்று அல்லது நான்கு மாவட்டங்களுக்கு ஒரு உளவியல் நிபுணர் மட்டுமே உள்ளதால், மாணவர்களின் தனிப்பட்ட பிரச்னைகளின் மீது கவனம் செலுத்த இயலவில்லை என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "வளர் இளம் பருவத்தில் உள்ள மாணவர்கள் பாலியல் மற்றும் உடல்ரீதியான பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். பெற்றோர்களிடமோ, ஆசிரியர்களிடமோ சொல்ல தயங்குகின்றனர்.
ஆனால், உளவியல் நிபுணர்களின் வித்தியாசமான அணுகுமுறை மாணவர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், பிளஸ்1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், இதுபோன்ற சந்தேகங்களை, பெண் உளவியல் நிபுணரிடம் கேட்டறிந்துகொள்ள தயக்கம் காண்பிக்கின்றனர். ஒவ்வொரு மண்டலத்துக்கும், ஆண் மற்றும் பெண் என இரண்டு உளவியல் நிபுணர்களை நியமிக்க வேண்டும்" என்றார்.
தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், "பாலியல் சார்ந்த பல்வேறு சந்தேகங்களால், தானாக தடம் மாறுபவர்கள், பிறரிடம் சிக்கிக் கொள்பவர்கள் என இரண்டு பிரிவு மாணவ, மாணவிகள் உள்ளனர்.
பள்ளிகளுக்கே ஆபாச வீடியோக்கள் கொண்ட மெமெரி கார்டு, மொபைல் போன் போன்றவற்றை திருட்டுத்தனமாக கொண்டு வருகின்றனர். இதுபோன்ற பொருட்களை பறிமுதல் செய்து கண்டிப்பதுடன், பெற்றோர்களை அழைத்து, தகவல் தெரிவிக்கிறோம். இதனால் மட்டும் மாணவர்கள் மத்தியில் மாற்றங்களை காண இயலவில்லை" என்றார்.

வசதிகள் ஏதுமின்றியும் தொடர்ந்து சாதிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்!

கோடிக்கணக்கில் செலவு செய்து அமைக்கப்பட்ட செயற்கை ஓடுகளம், செயற்கை புல்வெளி, கால்பந்து, ஹாக்கி மைதானங்கள், கண்ணைப் பறிக்கும் வெளிச்சத்தில் உள்ளரங்குகள் இருந்தால்தான் விளையாட்டு கனவு நனவாகுமா? சாதிக்க வேண்டும் என்ற வெறி இருந்தால் அடிப்படை வசதி எதுவுமின்றி பதக்கங்களை வெல்லலாம் என்பதை நிரூபித்து வருகின்றனர் அரசுப் பள்ளி மாணவர்கள்.மதுரை திருமங்கலம் பகுதியில் உள்ளது பி.அம்மாபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி. 11 ஏக்கர் பரப்பளவில் 3 ஏக்கரில் வகுப்பறை கட்டடங்கள்; 613 மாணவர்களுடன் செயல்படுகிறது. வகுப்பறை கட்டடத்தைத் தாண்டி மீதியிடம் மைதானமாக வெற்றிடமாக இருக்கிறது. அதனாலென்ன? குத்துச்சண்டையும், டேக்வாண்டோவும், தடகளமுமாக வெற்றிகளை தக்கவைத்து வருகின்றனர் மாணவர்கள்.தேசிய பள்ளிகள் விளையாட்டு குழுமம் நடத்தி வரும் தேசிய குத்துச்சண்டை போட்டிகளில் தொடர்ந்து மூன்றாண்டுகளாக தங்கப் பதக்கத்தை தக்க வைக்கும் மாணவி முத்துலட்சுமி, அடுத்து பதக்க கனவுக்காக போராடி வரும் மோனிஷா... கிராமத்திலிருந்து அதிகாலையில் ரேஸ்கோர்ஸ் மைதானத்திற்கு பயிற்சிக்காக துவங்குகிறது இவர்களின் பயணம்.கடந்தாண்டு உசிலை கல்வி மாவட்ட ஏ பிரிவு பள்ளிகளுக்கான போட்டிகளில் இப்பள்ளி முதலிடம் பெற்றது. மாவட்ட டேக்வாண்டோ திறந்தவெளி போட்டிகளில் 29 மாணவர்களை களமிறக்கியதில் 26 பேர் பதக்கங்களை வென்றனர். இதில் 6 தங்க பதக்கங்கள். கடந்தாண்டு நடந்த மாநில டேக்வாண்டோ போட்டியில் பவித்ரா வெண்கலம் வென்றார்.சிலம்பத்தில் 40 பேர் பயிற்சி பெறுகின்றனர். தடகளத்தில் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல் போட்டிகளில் 67 பேர் பயிற்சி பெறுகின்றனர். பயிற்சி என்றால் பள்ளியைச் சுற்றியுள்ள வயல்வெளியில் வெறும் கால்களில் பயிற்சி பெறுவதுதான். கபடி மற்றும் ஹேண்ட்பால் என அணியாக விளையாடும் போட்டிகளிலும் பதக்கம் பெற்றுள்ளனர்.கடந்த வாரம் நடந்த மண்டல பள்ளிகளுக்கான 14 வயது பிரிவு தடகளப் போட்டிகளில் மாணவி சுகப்ரியா 400 மீட்டர், 600 மீட்டர் மற்றும் நீளம் தாண்டுதல் ஆகிய மூன்றிலும் முதலிடம் பெற்று தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றார். அப்படியே மாநிலப் போட்டிக்கும் தகுதி பெற்றார். ஜூடோ போட்டியில் மாணவர்கள் பிரிவில் மூன்று தங்கம், நான்கு வெள்ளி, இரண்டு வெண்கலம், மாணவிகள் பிரிவில் மூன்று தங்கம், மூன்று வெள்ளி, நான்கு வெண்கலம் என 19 பதக்கங்களை வென்றனர்; டேக்வாண்டோ போட்டியில் மூன்று தங்கப்பதக்கங்களை வென்றனர்.எப்படி சாதிக்க முடிந்தது?உடற்கல்வி ஆசிரியர் சந்திரசேகர் பேசுகிறார்... ஏழாண்டுகளாக இப்பள்ளியில் பணிபுரிகிறேன். மற்ற விளையாட்டுகளை விட புதிய விளையாட்டுகளை மாணவர்கள் எளிதாக கற்றுக் கொள்கின்றனர். செலவும் குறைவு. ஆனால் டேக்வாண்டோ, ஜூடோ, சிலம்பப் போட்டிகளில் பங்கேற்பதற்கு சீருடை, கவசம் ஆகியவற்றுக்குத்தான் ஆயிரக்கணக்கில் செலவாகிறது. அதனால் அதிகபட்சம் இரண்டு உடைகள் வாங்கி, மாணவர்களுக்கு மாற்றி மாற்றி அணிவித்து போட்டிகளுக்கு அனுப்புகிறோம்.எந்த விளையாட்டுக்கும் எங்கள் மாணவர்களுக்கு தனி பயிற்சியாளர் இல்லை. ஏனென்றால் பணம் கொடுத்து கற்றுக் கொள்ளும் அளவிற்கு அவர்கள் வசதியானவர்கள் இல்லை. கிராமப்புறத்தில் விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தருவதால் மாணவர்களின் கவனம் வேறு திசைக்கு மாறாமல் பாதுகாக்க முடிகிறது.தலைமையாசிரியர் குமரேசன்: கிராமப்புற பெற்றோருக்கு விளையாட்டின் அருமை புரிவதில்லை. குறிப்பாக பெண் குழந்தைகள் விளையாடுவதை பிரச்னையாக பார்க்கின்றனர். குத்துச்சண்டை, ஜூடோ, தடகளப் போட்டிகளில் அடிபட்டால் வாழ்க்கை போய்விடும் என பயப்படுகின்றனர்.மாணவி சுகப்ரியா மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றும், பெற்றோர் அனுப்ப மறுத்தனர். மாநிலப் போட்டியில் பங்கேற்கும் சான்றிதழ் மூலம் கிடைக்கும் நன்மைகளை சொன்னபிறகே சம்மதித்தனர். விளையாட்டின் மூலம் எங்கள் பிள்ளைகள் பல்வேறு வேலை வாய்ப்பை பெற வேண்டும் என்பதே எங்கள் ஆசை என்றார்.

அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சிக்கான நுழைவு தேர்வு எழுத, இணையதளம் மூலம் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள தமிழக அரசின் குடிமைப் பணி தேர்வு பயிற்சி மைய முதல்நிலை பயிற்சிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் வரும் 23ம் தேதி நுழைவுத் தேர்வு நடக்கிறது.
நுழைவு தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் நுழைவுச் சீட்டுகளை மைய இணையதளம் www.civilservicecoaching.com மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்ய இயலாதவர்கள், தாங்கள் தேர்வு எழுத தெரிவு செய்துள்ள மாவட்ட தேர்வு மையத்திற்கு(மாவட்ட தேர்வு மைய விவரங்களை இணைய தளத்தில் காணவும்) தேர்வு நாள் அன்று 1 மணி நேரம் முன்னதாகவே சென்று நுழைவு சீட்டுக்களை பெற்று, தேர்வு எழுதலாம்.
சென்னை மாவட்டத்தைச் தேர்வு செய்த மாணவர்கள் பதிவிறக்கம் செய்ய இயலாதவர்கள் 044-24621475/9940636267 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தேர்வு மைய விபரங்களை பெற்றுக் கொள்ளலாம். இத்தகவலை விழுப்புரம் கலெக்டர் சம்பத் தெரிவித்துள்ளார்.