இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு ஐகோர்ட்டில் ‘அப்பீல்’ செய்துள்ளது.

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்றும் மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்த ஜெயகிருஷ்ணா உள்பட 18 பேர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த தனி நீதிபதி, ‘பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணிக்கான கவுன்சிலிங்கை நடத்திக்கொள்ளலாம். ஆனால், யாருக்கும் பணி நியமன உத்தரவு வழங்கக்கூடாது. ஏற்கனவே நடந்த கவுன்சிலிங்கின் போது பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டு இருந்தால் அவர்கள் பணியில் சேர தடை விதிக்கப்படுகிறது’ என்று நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் சோமையாஜி நேற்று நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன், ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு ஆஜராகி, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அரசு சார்பில் மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும், அந்த மனுவை அவசர மனுவாக எடுத்துக்கொண்டு உடனே விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து, மனுவை தாக்கல் செய்யும்படி கூறிய நீதிபதிகள், அவ்வாறு மனுவை தாக்கல் செய்து விசாரணைக்கு பட்டியலிடும் பட்சத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர். கோர்ட்டு பணி நேரம் முடிவடையும் நேரம் (மாலை 4.45 மணி) வரை ‘அப்பீல்’ மனு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை.
இதனால், தமிழக அரசின் ‘அப்பீல்’ மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிரியர் நியமனம் தொடர்பாக, தமிழக அரசிடம் இருந்து புதிய அரசாணை வெளிவந்தால், அதை நிறைவேற்ற தயாராக உள்ளோம் என ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.

ஆசிரியர் நியமனம் தொடர்பாக, தமிழக அரசிடம் இருந்து புதிய அரசாணை வெளிவந்தால், அதை நிறைவேற்ற தயாராக உள்ளோம் என ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.
புதிய ஆசிரியர் நியமன விவகாரம் இடியாப்ப சிக்கலாக மாறியுள்ளது. வெயிட்டேஜ் மதிப்பெண்ணை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், ஆசிரியரை பணி நியமனம் செய்ய நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
இந்த விவகாரத்தில், தமிழக அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த பிரச்னையில், அடுத்ததாக என்ன நடக்கும் எனத் தெரியாமல் தேர்வுபெற்ற ஆசிரியரும், தேர்வு பெறாத ஆசிரியரும் திகிலில் உள்ளனர்.
ஆசிரியர் தேர்வு பட்டியலை வெளியிட்டபோது, தற்போதைய தேர்வுப் பட்டியல் தற்காலிகமானது; வழக்கின் இறுதி தீர்ப்பிற்கு, தேர்வுப் பட்டியல் உட்பட்டது என டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது. இதனால் ஏதாவது மாற்றம் வரலாம் எனவும், தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து டி.ஆர்.பி., வட்டாரம் கூறுகையில், "கடைசியாக வெளியிட்ட அரசாணையின் அடிப்படையில்தான் ஆசிரியர் தேர்வுப் பட்டியலை வெளியிட்டோம். இனி, மேலும் ஒரு புதிய அரசாணை வந்தால், அதற்கேற்பவும் பட்டியலை தயாரித்து வெளியிட தயாராக உள்ளோம்" என தெரிவித்தது.