தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2008–2011–ம் வருட காலத்தில் தேர்ச்சி சதவீதம் 72 ஆக இருந்தது. அது 2010–2013–ம் ஆண்டு மார்ச் மாத காலத்தில் 47 ஆக குறைந்துள்ளது என்று இந்திய தணிக்கை துறை அறிவித்துள்ளது.

பாலிடெக்னிக் கல்லூரிகள்

தமிழ்நாட்டில் தொழில்நுட்ப கல்வி என்ஜினீயரிங் கல்லூரிகளிலும், பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் கற்பிக்கப்படுகிறது. என்ஜினீயரிங் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வு நடத்தி மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். ஆனால் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அந்தந்த கல்லூரிகளில் விண்ணப்பித்த மாணவர்களின் மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் நடக்கிறது.
தொழில்நுட்ப கல்விக்காக 11–வது ஐந்தாண்டு திட்டத்தில் ரூ.241 கோடியே 60 லட்சம் ஒதுக்கப்பட்டது. அதில் பாலிடெக்னிக் கல்லூரிகளின் வளர்ச்சிக்காக மட்டும் ரூ.14 கோடியே 78 லட்சம் ஒதுக்கப்பட்டது.
மாணவர் சேர்க்கையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 5 முதல் 11 சதவீதம் வரையிலும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 6 முதல் 15 சதவீதமும் குறைவாகவும் இருந்தது. மாதிரி ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருந்தன. அதுபோல விடுதியில் தங்கும் மாணவர்களின் எண்ணிக்கையை விட அதிக மாணவர்கள் தங்கி இருந்தனர். அதாவது 74 சதவீத மாணவர்கள் அதிகமாகவும், 94 சதவீத மாணவிகள் கூடுதலாகவும் இருந்தது கண்டறியப்பட்டது.
தேர்ச்சி சதவீதம் குறைந்தது
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்களின் தேர்ச்சி வீதம் 2008–2011–ம் ஆண்டுகளில் 72 சதவீதமாக இருந்தது. ஆனால் அந்த சதவீதம் 2010–2013–ம் ஆண்டு 47 சதவீதமாக குறைந்துள்ளது (25 சதவீதம் குறைந்துள்ளது). 7 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 154 ஆய்வகங்களுக்கு பதிலாக 104 ஆய்வகங்கள் மட்டுமே இருந்தன. அதாவது 49 ஆய்வகங்கள் குறைவாக இருந்தன.
இந்த தகவலை இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை தெரிவித்துள்ளது.