1,047 காலி பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட குரூப்–2 முதல் நிலை தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமை பணி தேர்வு–2–ல்(குரூப்–2) துணை வணிகவரி அலுவலர், சார்பதிவாளர் நிலை–2, தொழிலாளர் உதவி ஆய்வாளர், நிதித்துறையில் உதவிப்பிரிவு அலுவலர், சட்டத்துறையில் உதவிப்பிரிவு அலுவலர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட துறைகளில் காலியாக உள்ள 19 பதவிகளுக்கான 1,047 பணியிடங்களுக்காக, கடந்த ஆண்டு டிசம்பர் 1–ந் தேதி தேர்வு நடந்தது.
இந்த தேர்வு தமிழகம் முழுவதும் 114 நகரங்களில், 2 ஆயிரத்து 269 தேர்வு மையங்களில் நடந்தது. 4 லட்சத்து 98 ஆயிரத்து 471 பட்டதாரிகள் தேர்வு எழுதினர். முதல் நிலை தேர்வு முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டது. இதில், 11,497 பேர் தேர்ச்சி பெற்று, அடுத்தக்கட்ட முதன்மை தேர்வுக்கு தேர்வாகி உள்ளனர். அவர்களின் விவரம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
குரூப்–2–ல் காலியாக உள்ள 19 பதவிகளுக்கான 1,047 காலி பணியிடங்களுக்கான முதல் நிலை எழுத்து தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் 1–ந் தேதி நடந்தது. தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீடு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் முதன்மை எழுத்து தேர்விற்கு தேர்வு செய்யப்பட்ட 11,497 விண்ணப்பதாரர்களின் பதிபெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைவளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முதன்மை எழுத்து தேர்வு நவம்பர் 8–ந் தேதி காலை மற்றும் மதியம் நடைபெறும்.
நவம்பர் மாதம் 8–ந் தேதி நடக்கும் முதன்மை தேர்வில் வெற்றி பெறுகிறவர்கள், அடுத்தபடியாக நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு அரசு பணிகள் வழங்கப்படும்.

மதிப்பெண் சான்றுகளின் உண்மை தன்மை அறிய, அரசு தேர்வுகள் இயக்ககம், ஆன்-லைன் முறையை விரைவில் கொண்டு வருகிறது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியலை, அரசு தேர்வுகள் இயக்ககம் வழங்குகிறது. பணியில் சேரும்போது, இந்த சான்றிதழ்கள் முக்கிய ஆவணம். இதன் உண்மை தன்மையை அறிய, அரசு தேர்வுகள் இயக்ககத்துக்கு மீண்டும் அனுப்பி உறுதி செய்யப்படுகிறது.
இதுபோல், அரசு தேர்வுகள் இயக்ககத்துக்கு, ஆயிரக்கணக்கான சான்றுகள் வருவதால், அவற்றை சரி பார்ப்பதில், பெரும் தாமதம் ஏற்படுகிறது. இதை தீர்க்க, ஆன்-லைன் மூலம், கல்வி சான்றுகளின் உண்மை தன்மை அறியும் வகையில், புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, கல்வியாண்டுகள் வாரியாக, சான்றிதழ்கள் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. மதிப்பெண் சான்றிதழில் உள்ள மாணவர் பெயர், பிறந்த தேதி, கோடு எண் மற்றும் தேர்வு பதிவு எண்களை குறிப்பிட்டு விண்ணப்பித்தால், பதிலை, ஆன்-லைனில் உடனே உறுதி செய்து விடும் வகையில், திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது.