சென்னை: அண்ணா பல்கலைக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக நாக் (தேசிய தர நிர்ணய கவுன்சில்) குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

பல்கலைக்கு ஏ கிரேடு அங்கீகாரம் கிடைக்குமா என்பது இம்மாத இறுதிக்குள் தெரியும். பல்கலை மற்றும் கல்லூரிகளை ஆய்வு செய்து அவற்றின் உள்கட்டமைப்பு வசதிகள் பாடத் திட்டம், கற்பித்தல் திறன், தகுதியான ஆசிரியர், ஆராய்ச்சி திட்டங்கள் உள்ளிட்ட பல வகை அம்சங்களையும் குறிப்பெடுத்து ஒவ்வொன்றிற்கும் மதிப்பெண் அடிப்படையில் கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகார சான்றிதழை நாக் அமைப்பு வழங்குகிறது.யு.ஜி.சி. (பல்கலை மானிய குழு) கீழ் இயங்கும் நாக் அமைப்பு உயர்கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்து ஏ, பி, சி, டி என நான்கு வகைகளில் அங்கீகார சான்றிதழ் வழங்குகிறது. டி வகையில் வரும் கல்வி நிறுவனங்களை நாக் அங்கீகரிக்காது.இதர மூன்று பிரிவுகளில் வரும் கல்வி நிறுவனங்களை நாக் அங்கீகரித்து சான்றிதழ் வழங்குகிறது. நாக் அங்கீகாரம் பெற்றால் யு.ஜி.சி.யின் நிதி உதவிகள் தாராளமாக கிடைக்கும். இதனால் உயர்கல்வி நிறுவனங்கள் நாக் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கின்றன.ஒரு முறை பெறும் அங்கீகாரம் ஐந்தாண்டுகள் வரை செல்லத்தக்கது. அண்ணா பல்கலைக்கு நாக் அமைப்பு ஏற்கனவே வழங்கிய ஏ கிரேடு அங்கீகாரம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. எனவே அப்பல்கலை மீண்டும் விண்ணப்பித்ததன் அடிப்படையில் பாட்டின் என்பவர் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழு நேற்று முன்தினம் முதல் அண்ணா பல்கலையில் ஆய்வு செய்து வருகிறது.இது குறித்து அண்ணா பல்கலை வட்டாரம் கூறியதாவது: இரு முன்னாள் துணைவேந்தர்கள் மற்றும் ஏழு உயர் அலுவலர்கள் என ஒன்பது பேர் கொண்ட குழு ஆய்வு செய்து வருகிறது. 26ம் தேதி வரை ஆய்வு தொடரும். ஆய்வு அறிக்கையை யு.ஜி.சி.யிடம் வழங்குவர். அதன்பின் ஓரிரு நாளில் அண்ணா பல்கலைக்கு எந்த வகையான சான்றிதழ் கிடைக்கும் என்பது தெரிய வரும். அண்ணா பல்கலைக்கு உயர்ந்தபட்ச அங்கீகாரமான ஏ கிரேடு அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகிறோம். இவ்வாறு பல்கலை வட்டாரம் தெரிவித்தது.