பல துறைகளில் காலியாக உள்ள 3,000 இடங்களை நிரப்ப, விரைவில் குரூப் 4 போட்டித் தேர்வு அறிவிக்கப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., (அரசு பணியாளர் தேர்வாணையம்) தலைவர், பாலசுப்ரமணியன் (கூடுதல் பொறுப்பு) தெரிவித்தார்.

 குரூப் 2: கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி, 1,064 காலி பணியிடங்களை நிரப்ப, குரூப் 2 முதல்நிலைத் தேர்வு நடந்தது. இதன் முடிவு 20 நாட்களில் வெளியிடப்படும். கால்நடை பராமரிப்பு துறையில் 686 டாக்டர்கள், தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் பணியை நிரந்தரப்படுத்தும் வகையில், விரைவில் சிறப்பு தேர்வு நடத்தப்படும்.மேலும், 385 பணியிடங்கள், நேரடியாக நிரப்பப்படும். பல துறைகளில், குரூப் 4 நிலையில் (தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணிகள்), காலியாக உள்ள 3,000 இடங்களை நிரப்ப, போட்டித்தேர்வு குறித்த அறிவிப்பு 40 நாட்களில் வெளியிடப்படும். உரிமையியல் நீதிபதி பதவியில் 162 பணியிடங்களை நிரப்ப, இன்று (நேற்று), அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இன்று முதல், வரும் செப்டம்பர் 21ம் தேதி வரை www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளம் வழியாக, தேர்வுக்கு பதிவு செய்யலாம். வரும் அக்டோபர் 18 மற்றும் 19ம் தேதிகளில் ஒரு நாளைக்கு, இரு தாள் வீதம், இரு நாளும் சேர்த்து, நான்கு தாள்களுக்கு தேர்வு நடக்கும். தலா 100 மதிப்பெண் வீதம் 400 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கும். பின் 60 மதிப்பெண்ணுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்படும். பி.எல்., முடித்தவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.