நிதிச்சுமை காரணமாக, பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிட்டவர்கள், தொடர்ந்து படித்து, டாக்டரேட் நிலை வரை செல்வதற்குரிய திட்டத்தை மத்திய அரசு வகுத்து வருகிறது என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: இந்தாண்டு டிசம்பர் மாதத்தில் இத்திட்டம் முழுமையாக வரைவு பெற்றுவிடும். இதன்மூலம், பொருளாதார காரணங்களுக்காக, தங்களின் படிப்பை பாதியிலேயே விட்டவர்கள், பிஎச்.டி., வரை தங்களின் கல்வியை நிறைவுசெய்யும் வகையில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.பெண்கள், பழங்குடியின குழந்தைகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பலர், பொருளாதார காரணங்களால், ஏதேனும் ஒரு வேலையில் சேர வேண்டி, தங்களின் படிப்பை கைவிடுகிறார்கள். நானும்கூட, பணம் இல்லாமல் ஒரு காலத்தில் எனது படிப்பை கைவிட்டவள்தான்.மத்திய அரசு, சமீபத்தில் "இஷான் விகாஸ்" என்ற திட்டத்தை நிறுவியுள்ளது. இதன்மூலம், 9ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில், ஆராய்ச்சியாளர்கள் அல்லது விஞ்ஞானிகளாக வரக்கூடிய திறன் படைத்தவர்கள், Orientation நோக்கத்திற்காக, ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., போன்ற முக்கிய கல்வி நிறுவனங்களுக்கு சென்றுவர முடியும்.இதன்மூலம், ஒவ்வொரு ஆண்டும், ஓரியன்டேஷனுக்காக, இரண்டு batch -களாக, சுமார் 2,200 மாணவர்கள், மேற்கூறிய கல்வி நிறுவனங்களுக்கு சென்று வருவார்கள்.நமது கல்வித்திட்டம் கடைசியாக 1986ம் ஆண்டு வகுக்கப்பட்டது. எனவே, தற்போதைய சூழலில், நாம் புதிய திட்டங்களை வகுக்க வேண்டியுள்ளது. Yuva For Seva என்ற திட்டம், அதன் ஒரு பகுதியாக இருக்கும் என்று நாம் நம்புகிறேன்.நமது அரசு, நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்தி, அப்பள்ளிகள், அவற்றின் அன்றாட நிகழ்வுகளில் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் வகையிலான திட்டம், ஒரு ஆண்டுக்குள் சாத்தியமாகும்.
இதன்மூலம், அரசுப் பள்ளிகளில், தங்களின் பிள்ளைகளை சேர்த்துவிட்டுள்ள பெற்றோர்கள், அவர்கள் சரியான நேரத்தில் பள்ளியை அடைந்துவிட்டார்களா என்பதை மொபைல் போன் மூலமாக அறிந்துகொள்ளுதல், பள்ளியில் நடக்கும் நிகழ்வுகள், என்னவிதமான assignments கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் அவை முடிக்கப்பட்டுவிட்டனவா, இல்லையா? என்பது குறித்த விபரங்களையெல்லாம் தெரிந்துகொள்ள முடியும். இவ்வாறு அமைச்சர் இரானி கூறினார்.