அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழா; 1.84 லட்சம் பேருக்கு பட்டம்!

பட்டினியால் அவதிக்கு உள்ளாகும் 76 நாடுகள் பட்டியலில், இந்தியா 55வது இடத்தில் உள்ளது. தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல், குறைவான எடையுடன், அதிகமான குழந்தைகள், இந்தியாவில் பிறக்கின்றன,” என, வேளாண் விஞ்ஞானி, எம்.எஸ்.சுவாமிநாதன் வேதனை தெரிவித்தார்.
சென்னை, அண்ணா பல்கலையின், 35வது பட்டமளிப்பு விழா, பல்கலை வளாகத்தில், நவ. 5ம் தேதி காலை நடந்தது. கவர்னர், ரோசய்யா தலைமை தாங்கினார். பல்கலை துணைவேந்தர் ராஜாராம் வரவேற்றார்.
விழாவில், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது:
உலகள வில், ஒரு பக்கம் சத்தான உணவு கிடைக்காமல், குழந்தைகள் பாதிக்கும் நிலையும், மற்றொரு பக்கம் உணவுப் பொருட்கள் அதிகளவில் வீணாகும் நிலையும் இருக்கிறது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில், அதிகளவில், உணவுப் பொருட்களை உற்பத்தி செய்தாலும், அவை முறையாக சேமிக்கப்படுவதில்லை. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில், மக்கள் அதிகளவில் உணவுப் பொருட்களை வீணடிக்கின்றனர்.
சர்வதேச அளவில் அதிக பட்டினி நிலவும் 76 நாடுகளில், இந்தியா 55வது இடத்தில் உள்ளது. நாட்டில், சத்தான உணவுப்பொருள் கிடைக்காததால், எடை குறைவான குழந்தைகள் அதிகம் பிறக்கின்றன. இதுபோன்ற நிலை மாற வேண்டும். அண்ணா பல்கலையில், ’பயோ - டெக்னாலஜி’ துறை சார்ந்து, புதிய கொள்கைகள் இல்லை. அதை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, சுவாமிநாதன் பேசினார்.
விழாவில், அனைத்து பாடப் பிரிவுகளிலும், முதலிடம் பிடித்த மாணவ, மாணவியருக்கு, தங்க பதக்கங்கள் வழங்கப்பட்டன. 1,010 பேர், பல்வேறு துறைகளில், பிஎச்.டி., பட்டங்களை பெற்றனர். இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளில், 1.84 லட்சம் பேர், பட்டம் பெற்றனர்.

அடுத்தாண்டு முதல், புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

ஒரு கல்வி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் இதுகுறித்து கூறியதாவது: புதிய கல்விக்கொள்கையை மத்திய அரசு விரைவில் தொடங்கும். கல்விக் கொள்கையில், அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் ஆகியோர் மட்டுமே பங்களித்தால் போதாது, பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களும் பங்கெடுக்க வேண்டும்.
இந்த நாட்டின் தலைவிதி, நெடுங்காலமாக, அரசியல் செய்தோரிடம் சிக்கிக் கொண்டிருந்தது. இப்போதுதான், அது விடுதலையடைவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
கல்வித் தொடர்பான மாற்றம் என்பது ஒரு அரசில் மட்டுமே நிகழ்ந்துவிடாது. அது அடிமட்ட அளவிலும் நிகழ வேண்டும் மற்றும் மாற்றத்தைக் கொண்டுவரும் வாகனங்களாக ஆசிரியர்கள் திகழ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அந்த நிகழ்ச்சியில், பள்ளிகளில், முழுமையான சுய-மதிப்பாய்வை மேற்கொள்ளும் வகையிலான, சரன்ஷ் என்ற அம்சத்தையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த அம்சத்தின் மூலம், கற்றலில் குறைபாடுள்ள மாணவர்கள், பெரிதும் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.