தமிழகத்தில், மாணவர்களின் இடைநிற்றல் (டிராப் அவுட்ஸ்) விகிதம் குறைந்து விட்டதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.கல்வித்துறை புள்ளி விவரப்படி, 2001 - 02ல், தொடக்கநிலை வகுப்பில், மாணவர் இடைநிற்றல் 12 சதவீதமாக இருந்தது, 2013 - 14ல், 0.95 சதவீதமாக குறைந்துவிட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.நடுநிலை வகுப்புகளில், 2001 - 02ல், 13 சதவீதமாக இருந்த இடைநிற்றல், 2013 - 14ல், 1.65 சதவீதமாக குறைந்துவிட்டதாகவும், கல்வித் துறை தெரிவித்துள்ளது. ஆரம்ப, நடுநிலை வகுப்புகளில், மாணவர் சேர்க்கை 99 சதவீதமாக இருப்பதாகவும், கல்வித் துறை தெரிவித்துள்ளது."மாணவர்களுக்கு, இலவச நோட்டு புத்தகம், பாடப் புத்தகம், இலவச சைக்கிள், லேப் - டாப் உட்பட, 14 வகையான இலவச திட்டங்கள் வழங்கப்படுவதால், மாணவர்கள் உற்சாகமாக இருக்கின்றனர். இதன் காரணமாக, கிராமப்புறங்களில், பள்ளி இடைநிற்றல் அளவு கணிசமாக குறைந்துவிட்டது" என கல்வித் துறை வட்டாரம் கூறுகிறது.இதுகுறித்து, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது: இடைநிற்றல் குறித்தும், முழுமையான அளவில், அனைத்து குழந்தைகளும் பள்ளிகளில் சேர்ந்தார்களா என்பது குறித்தும், கல்வித்துறை அல்லாத பிற அமைப்புகளிடம் முழுமையான புள்ளி விவரம் இருக்கிறதா என தெரியவில்லை.இடைநிற்றல் விகிதம் குறைந்திருப்பது சரியாக இருக்கலாம். ஆனால், பள்ளி சேராத தெருவாழ் சிறார்கள், இன்றும் அதிகளவில் இருக்கின்றனர். சென்னையிலேயே பல குடிசை பகுதிகள் உள்ளன. அங்குள்ள சிறுவர்கள் அனைவரும் கல்வி கற்கின்றனர் என்பதை உறுதியாக கூற முடியாது.எனவே, தெருவாழ் சிறுவர்கள், குடிசை பகுதிகளில் வாழும் சிறுவர்கள் மற்றும் பிழைப்பிற்காக, ஒரு பகுதியில் இருந்து, மற்றொரு பகுதிக்கு குடியேறிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் ஆகிய அனைவரையும், ஆரம்பப் பள்ளிகளில் சேர்ப்பதை, கல்வித் துறை உறுதி செய்ய வேண்டும்.அத்துடன், அவர்கள், தொடர்ந்து கல்வி கற்பதையும் கண்காணிக்க வேண்டும். இதை செய்தால்தான், மாணவர் சேர்க்கையில் 100 சதவீதத்தை எட்ட முடியும். இவ்வாறு பிரின்ஸ் தெரிவித்தார்
தமிழகத்தில், சித்த, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் நாளை(ஜுலை 30) முடிகிறது.
தமிழகத்தில், சித்த, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் நாளை(ஜுலை 30) முடிகிறது.இதுவரை, 3,525 பேர் விண்ணப்பங்களை பெற்றுள்ளனர். தமிழகத்தில், சென்னை, மதுரை, பாளையங்கோட்டை மற்றும் நாகர்கோவிலில் சித்த, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய மருத்துவம் சார்ந்த ஆறு அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.சித்தா பி.எஸ்.எம்.எஸ்., ஆயுர்வேதம் பி.ஏ.எம்.எஸ்., யுனானி பி.யு.எம்.எஸ்., நேச்சுரோபதி மற்றும் யோகா பி.என்.ஓய்.எஸ்., மற்றும் ஓமியோபதி பி.எச்.எம்.எஸ்., படிப்புகளுக்கு 296 இடங்கள் உள்ளன. இதுதவிர, சுயநிதி கல்லூரிகளில் இருந்து, மாநில ஒதுக்கீட்டுக்கு 900 இடங்கள் வரை கிடைக்கும். இந்த படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப வினியோகம் 14ம் தேதி துவங்கியது.இரண்டு வாரங்கள் ஆன நிலையில், இதுவரை 3,525 பேர், விண்ணப்பங்களை பெற்றுள்ளனர். இதில், 2,510 விண்ணப்பங்கள் வந்துள்ளன.இதுகுறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்க அதிகாரி ஒருவர் கூறுகையில், "விண்ணப்பங்கள் பெற, 30ம் தேதி கடைசி நாள். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், 31ம் தேதிக்குள் வர வேண்டும். முன்கூட்டியே விண்ணப்பித்து இருந்தாலும், தாமதமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. மேலும் விவரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்" என்றார்.
வெளிமாநிலங்களில், ஆசிரியர் பயிற்சிப் படிப்பை முடித்த மாணவர்கள், தங்கள் சான்றிதழ்களை மதிப்பீடு செய்ய, ஆறுவகை சான்றிதழ்களை அனுப்ப வேண்டும்
வெளிமாநிலங்களில், ஆசிரியர் பயிற்சிப் படிப்பை முடித்த மாணவர்கள், தங்கள் சான்றிதழ்களை மதிப்பீடு செய்ய, ஆறுவகை சான்றிதழ்களை அனுப்ப வேண்டும் என, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.மதிப்பீடு: ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில், ஆசிரியர் பயிற்சிப் படிப்பை படித்த தமிழக மாணவர்கள், அம்மாநிலங்கள் வழங்கிய சான்றிதழை, தமிழக ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்திடம் சமர்ப்பித்து, மதிப்பீடு செய்ய வேண்டும்.இதன்பிறகே, தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யவும், டி.இ.டி., (ஆசிரியர் தகுதித்தேர்வு) தேர்வை எழுதவும் முடியும். இந்த வகையில், 2,000 பேர், தமிழக கல்வித் துறையிடம், மதிப்பீடு செய்ய காத்திருக்கின்றனர். இந்நிலையில், வெளிமாநில சான்றிதழ்களை மதிப்பீடு செய்ய, எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், வெளி மாநிலங்கள் வழங்கிய, ஆசிரியர் பயிற்சி முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மதிப்பெண் சான்றிதழ், ஆசிரியர் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ்(டி.சி.,), கோர்ஸ் சர்ட்டிபிகேட் ஆகியவற்றின் நகல்களை, விண்ணப்பித்துடன் இணைக்க வேண்டும்.மேலும், 500 ரூபாய் டிடி மற்றும் வெளிமாநில ஆசிரியர் கல்வித் துறை செயலர் பெயரில், 300 ரூபாய்க்கு, டிடி ஆகியவற்றுடன், இயக்குனர், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம், டி.பி.ஐ., வளாகம், கல்லூரி சாலை, சென்னை - 6 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)