தமிழகத்தில் 17 அரசு நர்சிங் கல்லுாரிகளில், முதல்வர் பணியிடங்கள் ஓராண்டுக்கும் மேலாக நிரப்பப்படாததால், செயல்பாடுகளில் தள்ளாட்டம் ஏற்பட்டுள்ளது. அரசு, இதில் கவனம் செலுத்தவில்லையே என மாணவர்கள் புலம்புகின்றனர்.
தமிழகத்தில் 23 அரசு நர்சிங் கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஆண்டுதோறும் 3,000 பேர் படிக்கின்றனர். 23 கல்லுாரிகளில், தற்போது ஆறு கல்லுாரிகளில் மட்டுமே முதல்வர்கள் உள்ளனர். மீதமுள்ள 17 கல்லுாரிகளில், முதல்வர் பணியிடங்கள் ஓராண்டுக்கும் மேலாக காலியாக உள்ளன.
இதனால், தேவையானவற்றை தீர்மானித்தல், முக்கிய முடிவுகளை எடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது. பெரும்பாலான கல்லுாரிகளில், நிர்வாகப் பணிகளை துணை முதல்வர், மூத்த ஆசிரியர்கள் செய்வதால், அவர்களின் வழக்கமான பணிகள், கல்வி போதிக்கும் பணிகளும் பாதிக்கும் சூழல் உள்ளது.
அரசு ஏனோ, இந்த கல்லுாரிகள் மீது போதிய கவனம் செலுத்தவில்லை. டிப்ளமோ நர்சிங் கலந்தாய்வு, அடுத்த வாரம் துவங்குகிறது. விரைவில், முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்கும் நிலையில், இனியாவது காலியாக உள்ள முதல்வர் இடங்களை நிரப்ப வேண்டும் என நர்சிங் மாணவர்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.
சுகாதாரத் துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "முதல்வர் இல்லாத நர்சிங் கல்லுாரிகளை, துணை முதல்வர்கள் கண்காணித்து வருகின்றனர். காலியாக உள்ள முதல்வர் பணியிடங்களை நிரப்ப, தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயாரித்து, அரசுக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளது" என்றார்.