உங்களுக்கான சரியான எம்.பி.ஏ. படிப்பை மேற்கொள்ளும் பொருட்டு, சில ஆலோசனைகளை இக்கட்டுரை அளிக்கிறது.

இயல்பாகவே, வணிகம் அல்லது நிர்வாகம் தொடர்பான ஆர்வமுள்ளவர்களுக்கு எம்.பி.ஏ. படிப்பு பொருத்தமானது. இந்த இயற்கையான ஆர்வம் இல்லாதவர்கள், எம்.பி.ஏ. படிக்கும் ஒரு நிலை வருகையில், அவர்கள் தங்களின் நோக்கம் என்ன என்பதை நிர்ணயித்து வைத்துக்கொள்வது அவசியம்.
அதிக சம்பளம் மற்றும் பதவி உயர்வு ஆகிய விஷயங்களை மட்டுமே மனதில் வைத்து, MBA படிக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது. அதனூடாக, எம்.பி.ஏ. படிப்பை எந்த நேரத்தில் அல்லது சூழலில் மேற்கொள்கிறோம்? அதற்கு இது சரியான தருணமா? என்பது குறித்தும் சிந்திக்க வேண்டும்.
பணி அனுபவம்
தொழில்துறை மற்றும் சந்தை நிலவரங்களைப் பற்றி ஒருவர் அறிந்துகொள்ள வேண்டுமெனில், அவருக்கு அடிப்படையில், சிறிதுகாலம் பணி அனுபவம் தேவை. தனது பணி அனுபவத்தின் மூலமே, ஒருவர் தனது எதிர்கால வளர்ச்சிக்கு, MBA படிப்பில் என்ன specialisation செய்யலாம் என்பதை தீர்மானிப்பது எளிது.
பணி அனுபவமே, உங்களிடமிருந்து சந்தை என்ன எதிர்பார்க்கிறது என்பதையும், அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற நீங்கள் என்ன specialisation படிக்க வேண்டும் என்பதையும் தீர்மானித்து, அதன்மூலம் நீங்கள், தேவைக்கேற்ற திறன்களை வளர்த்துக்கொள்ள உதவும்.
அதேசமயம், பணி அனுபவம் என்பது MBA படிக்க விரும்பும் அனைவருக்கும் கட்டாயம் வேண்டும் என்பதல்ல. புதிதாக பட்டப் படிப்பை முடித்த ஒருவர், தனக்குப் பொருத்தமான MBA படிப்பை தேர்வுசெய்ய, போதுமான சந்தை ஆராய்ச்சி, முன்னாள் மாணவர்களின் கருத்துக்கள் ஆகியவற்றின் மூலம் ஒரு தெளிவான முடிவை எடுக்கலாம்.
தொழில்பூர்வ இலக்குகளை தீர்மானித்தல்
MBA முடித்தப் பிறகு, நீங்கள் தற்போது பணிபுரியும் அதே தொழில்துறையில் நீடிக்கப் போகிறீர்களா? அல்லது புதிய துறைக்கு செல்லவுள்ளீர்களா? அல்லது உங்களின் சொந்த வணிகத்தை தொடங்க விரும்புகிறீர்களா? என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும். நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என்பதை வைத்தே, உங்களின் முடிவுகள் அமையும்.
எனவே, MBA படிப்பு மற்றும் அதற்கான கல்லூரியைத் தேர்வுசெய்யும்போது, மேற்கண்ட விஷயங்கள் குறித்த ஒரு தெளிவான முடிவு உங்களிடம் இருக்க வேண்டும்.
2 ஆண்டு ரெகுலர் MBA? அல்லது 1 ஆண்டு எக்சிகியூடிவ் MBA?
மேற்கண்ட இரண்டு வகை MBA படிப்புகளில், எது உங்களுக்கானது என்பதை முடிவு செய்வது அவசியமான ஒன்று. படிப்பிற்கான செலவு, உடன் படிப்பவர்களின் வயது,, கற்றல் அனுபவம் மற்றும் வேலை வாய்ப்பு திட்டங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இரண்டில் ஒன்றை தேர்வுசெய்ய வேண்டும்.
2 ஆண்டு MBA படிப்பு என்பது, ஆழமான விஷயங்களை அறிந்துகொள்ள உதவுவதுடன், நல்ல கற்றல் அனுபவத்தையும் தருகிறது. அதேசமயம், உங்களுக்கு 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணி அனுபவம் இருந்து, ஒரே தொழிலில் தொடர விரும்பினால், 1 ஆண்டு executive MBA படிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Feedback மற்றும் ஆராய்ச்சி
தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஆகியோரிடமிருந்து பெறும் feedback, சரியான படிப்பை தேர்வுசெய்ய உதவும். முன்னாள் மாணவர், கல்லூரியின் ஆசிரியர்கள், நெட்வொர்க்கிங், அங்கே படித்தவர்கள் பெற்ற வேலைவாய்ப்பு குறித்த புள்ளி விபரங்கள் போன்ற முக்கிய அம்சங்களை, நீங்கள் கட்டாயம் கருத்தில் கொள்ள வேண்டும்.
மேலும், சந்தைக்குத் தேவையான திறன்கள், முக்கியமான மற்றும் வளர்ந்துவரும் சந்தை நிலவரங்கள் ஆகியவற்றை, நிலையற்ற அம்சங்களோடும் சேர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.
நடைமுறைக்கு உதவாத அம்சங்களைக் கொண்ட MBA படிப்பு மற்றும் சந்தை நிலவரங்களிலிருந்து மாறுபட்ட அம்சங்களைக் கொண்ட specialisation ஆகியவற்றை மேற்கொள்வது புத்திசாலித்தனமல்ல. படிப்பின் மூலம் கிடைக்கும் பலன் மற்றும் செலவழிக்கும் பணத்தை திரும்ப எடுக்க முடியுமா? ஆகிய அம்சங்களை மனதில் வைத்தே, ஒரு படிப்பை தேர்வுசெய்ய வேண்டும்.
ஆர்வம் மற்றும் திறன்
நாம் ஏன் MBA படிக்கப் போகிறோம் என்ற கேள்விக்கு விடை காண்பது மிகவும் முக்கியமான தேவையாகும். உங்களுக்கு குழுவோடு இணைந்து பணியாற்ற பிடிக்குமா அல்லது தனியாக செயலாற்ற பிடிக்குமா அல்லது நீடித்த பயணம் மேற்கொள்ள பிடிக்குமா என்பதை ஆராய்ந்து, உங்களின் பலம் மற்றும் பலவீனங்கள் பற்றி மதிப்பிட வேண்டும். உங்களுக்கு எது கச்சிதமாகப் பொருந்துமோ, அதையே தேர்வு செய்தல் வேண்டும்.
MBA மற்றும் PGDM ஆகிய படிப்புகளுக்கு இடையிலான வித்தியாசம் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். நீங்கள் உயர்கல்வி(பிஎச்.டி. போன்ற படிப்புகள்) கற்கும் எண்ணத்தைக் கொண்டிருந்தால், MBA படிப்பையே மேற்கொள்ள வேண்டும். ஏனெனில், IIM போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் வழங்கும் PGDM படிப்புகள், உயர்கல்விக்கு செல்லும்போது, சர்வதேச அளவில், ஏற்றுக்கொள்ளப்படாமல் போகலாம்.

சி.பி.எஸ்.இ., பள்ளிகள், தமிழக அரசின் விதிமுறைகளில் இருந்தோ, கட்டண நிர்ணய குழு விதி முறைகளில் இருந்தோ தப்ப முடியாது என, கட்டண நிர்ணய குழு வட்டாரம் உறுதியாக தெரிவித்தது.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் கடிவாளத்தை, தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் கொண்டு வந்து, சமீபத்தில் தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய குழு வட்டாரம் கூறியதாவது: மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திடம் (சி.பி.எஸ்.இ.,) அங்கீகாரம் பெற்ற ஒரே காரணத்தினால், தமிழக அரசிடம் இருந்தோ, தமிழக அரசால் அமைக்கப்பட்டு உள்ள கட்டண நிர்ணய குழுவிடம் இருந்தோ, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் தப்பிவிட முடியாது.
தமிழகத்தில் 500 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உள்ளன. அனைத்துப் பள்ளிகளுக்கும், குழு, கட்டணத்தை நிர்ணயிக்கும். இந்த கட்டணத்தை, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் கடைபிடிக்க வேண்டும். 500 மெட்ரிக் பள்ளிகளுக்கு, தற்போது, புதிதாக கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
கட்டணம் நிர்ணய காலம் முடியும் பள்ளிகளுக்கு, தொடர்ந்து, மூன்று கல்வி ஆண்டுகளுக்கான கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படும். இவ்வாறு குழு வட்டாரம் தெரிவித்தது.

கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வு, வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே நடக்கும்; விண்ணப்பம் அனுப்பக்கூடாது என, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) கேட்டுக் கொண்டுள்ளது.

கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வு, வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே நடக்கும்; விண்ணப்பம் அனுப்பக்கூடாது என, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) கேட்டுக் கொண்டுள்ளது.
அரசு பள்ளிகளில், 652 கம்ப்யூட்டர் பயிற்றுநர் காலி பணியிடங்களை நிரப்பும் பணி, வேலை வாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில் நடக்க உள்ளது. வேலை வாய்ப்பு இயக்குனரகத்தால் பரிந்துரை செய்யப்படுபவர்கள் மட்டுமே, ஆசிரியர் பணிக்கு, பரிசீலனை செய்யப்படுவர்.
இந்த வேலை தொடர்பாக, டி.ஆர்.பி., விண்ணப்பம் எதையும் கேட்கவில்லை. எனவே, பதிவுதாரர்கள், டி.ஆர்.பி.,க்கு, விண்ணப்பம் எதையும் அனுப்ப வேண்டாம். இவ்வாறு, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.