அங்கீகாரமற்ற படிப்புகளை நம்பி ஏமாற வேண்டாம்: யு.ஜி.சி. அறிவுறுத்தல்

 அரசு, தனியார், நிகர்நிலை பல்கலைகளின் கல்வி மையங்கள் என்ற பெயரில், செயல்படும் நிறுவனங்கள், அங்கீகாரமில்லாத படிப்புகளை நடத்துவதால், அவற்றை நம்ப வேண்டாம் என, பல்கலைக்கழக மானியக் குழுவான யு.ஜி.சி., மீண்டும் அறிவுறுத்தி உள்ளது.
அரசு, தனியார், நிகர்நிலை பல்கலைகள், கல்லூரிகள் என, எந்த கல்வி நிறுவனமாக இருந்தாலும், அதற்கான அங்கீகாரம், பாடங்களுக்கான அனுமதி என அனைத்தும் யு.ஜி.சி.,யின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றன.
நாடு முழுவதும் செயல்படும், பல்கலைகள், அவை அனுமதி பெற்றுள்ள வரம்பிற்குள் மட்டுமே, கல்வி வளாகங்கள், கல்வி மையங்களை அமைக்க முடியும். வரம்பை தாண்டி கல்வி மையங்களை அமைக்கக் கூடாது என யு.ஜி.சி., அறிவுறுத்தி உள்ளது.
மேலும், அரசு, தனியார், நிகர்நிலை பல்கலைகளின் அங்கீகாரம் பெற்ற மையங்கள் என செயல்படும் சிறிய கல்வி மையங்கள் பல, அனுமதி பெறாத பல படிப்புகளை நடத்தி வருவதாக புகார்கள் எழுந்தன. இப்புகார்கள் அடிப்படையில், கடந்தாண்டு ஜூலை 12ம் தேதி, இதுகுறித்த பொது அறிவிப்பு ஒன்றை யு.ஜி.சி., வெளியிட்டது.
இந்த நிலையில், அங்கீகாரம் இல்லாத கல்வி மையங்கள், வளாக மையங்கள் சார்பில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளதை யு.ஜி.சி., கண்டுபிடித்துள்ளது. இதையடுத்து, மீண்டும் அதே பொது அறிவிப்பை யு.ஜி.சி., வெளியிட்டு, இதுபோன்ற அங்கீகாரம் பெறாத கல்வி மையங்களில் சேர வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது.

ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி இல்லாததால் பாதிக்கப்படும் மாணவர்கள்; வீணாகும் லேப்டாப்

தொடக்கக் கல்வித்துறையின்கீழ், மாநிலம் முழுவதும் கற்பித்தல் பணிக்காக ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட லேப்டாப், கம்ப்யூட்டர் சார்ந்த நவீன பயிற்சிகள் ஆசிரியர்களுக்கு இல்லாத காரணத்தால், பயனற்று பள்ளிகளில் வீணாகி வருகிறது.
தொடக்கல்வித்துறைக்கு உட்பட்ட 8,026 நடுநிலைப் பள்ளிகளுக்கு நான்கு கட்டங்களாக, லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பிலும், பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டன. இன்றைய உலகில் அனைத்து செயல்பாடுகளும் தொழில்நுட்பத்தை சார்ந்தே உள்ளது என்பதை உணர்ந்த பள்ளிக்கல்வித்துறை, கனெக்டிவ் கிளாஸ் ரூம், மாணவர்களுக்கு இலவச லேப்டாப் உட்பட பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது.
இதன்படி, ஒவ்வொரு ஆசிரியரும் குறைந்தபட்சம் வாரத்தில் ஐந்து பாடவேளைகள் கற்பித்தலுக்கு, லேப்டாப் பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. மேலும், ஆசிரியர்கள் கற்பித்தல் பணியை மேற்கொள்வதை முறையாக, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மேற்பார்வையில், கண்காணிக்கவும், உணவு இடைவேளைக்கு முன்பு அல்லது பின்பு வகுப்புகளை கம்ப்யூட்டர் வழி கற்பித்தல் முறைக்கு பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டு, அதற்கான தொகுப்புகளும் வழங்கப்பட்டன.
லேப்டாப் சார்ந்த அடிப்படை பயிற்சிகள் இல்லாத பெரும்பாலான ஆசிரியர்கள், கற்பித்தல் பணிக்கு லேப்டாப் பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்களும் தொழில்நுட்பம் சார்நத அறிவை தொடக்க நிலைகளில் பெற இயலாமல், உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சமயங்களில் சிரமப்படும் சூழல்கள் உருவாகியுள்ளது.
கோவை மாவட்டத்தில், 244 அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு சில பள்ளிகளை தவிர பெரும்பாலான பள்ளிகளில் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்கள் வெறும் அலங்கார பொருட்களாகவே வைக்கப்பட்டுள்ளன.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் காந்திமதி கூறுகையில், "கற்பித்தல் பணிக்கு, லேப்டாப் பயன்படுத்தாத பள்ளிகள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பள்ளி தலைமையாசிரியர்களிடம் தொடர்ந்து இதுகுறித்து அறிவுறுத்தப்படுவதுடன், நடுநிலைப் பள்ளிகளில் மூன்று அல்லது நான்கு லேப்டாப் இருக்கும் பட்சத்தில், தொடக்கப் பள்ளிகளுக்கு ஒன்று வழங்குமாறும் தெரிவித்துள்ளோம். உதவி தொடக்க கல்வி அலுவலர் மூலம், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது" என்றார்.

தேசிய திறனாய்வு தேர்வில் மாணவர்கள் ஆர்வக் குறைவு: கல்வியாளர்கள் கவலை

மாநிலம் முழுவதும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு நடந்தது. பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இத்தேர்வில் ஈடுபாடு காண்பிப்பதில்லை என்று கல்வியாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் தேசிய திறனாய்வு தேர்வில், 3055 மாணவர்களே பங்கேற்றனர். மத்திய அரசு, நாடு முழுவதும், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, போட்டித் தேர்வை நடத்தி வருகிறது. தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு, பிளஸ் 1 முதல், பிஎச்.டி., வரை, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் இத்தேர்வின், முதல் கட்ட தேர்வு, மாநிலம் முழுவதும் 350 தேர்வு மையங்களில் நடந்தது. இத்தேர்வில், பெரும்பாலும் சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களே ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர்.
தேசிய திறனாய்வு தேர்வு குறித்த போதிய விழிப்புணர்வு, பயிற்சிக் குறைவால் அரசு பள்ளி மாணவர்கள் முற்றிலும் இத்தேர்வை புறக்கணிப்பதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பெரும்பாலான பள்ளிகள் இத்தேர்வில் ஆர்வம் காண்பிப்பதில்லை. இதனால், திறமைகள் இருந்தும் பல மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
கோவை மாவட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதும் நிலையில், தேசிய திறனாய்வு தேர்வில் வெறும் 3055 மாணவர்களே பங்கேற்றுள்ளனர். மொத்தமுள்ள 400 பள்ளிகளில், 195 பள்ளிகளிலிருந்து, பள்ளிக்கு இரண்டு அல்லது மூன்று மாணவர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.
பொதுத்தேர்வுகளில் பெரும்பாலான மாணவர்கள், 70 சதவீதத்திற்கு மேலாக மதிப்பெண்களை அள்ளிச்செல்லும் நிலையில், இதுபோன்ற திறனாய்வு தேர்வுகளில் பங்கேற்க தயக்கம் காண்பிப்பது ஏன்? என்பது கேள்விக்குறியே. மேலும், ஆன்-லைன் முறையில், பள்ளிகள் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும் என்பதால், பள்ளி நிர்வாகங்கள் போதிய கவனம் செலுத்தாததால், திறமைமிக்க மாணவர்களும் விண்ணப்பிக்க இயலாமல் போனது.
முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி கூறுகையில், "தேசிய திறனாய்வு தேர்வு குறித்து கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், கோவையில் அதிக மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அரசு பள்ளிகள், கிராமப்புற மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிகரித்து பயிற்சிகள் அளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கும் இது குறித்து அறிவுறுத்தப்படும்" என்றார்.