கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மூன்றாம் மொழிப்பாடமாக ஜெர்மன் தொடரும்’ என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மூன்றாம் மொழிப்பாடமாக இருந்த அயல்நாட்டு மொழியான ஜெர்மன் மாற்றப்பட்டு, சமஸ்கிருதம் கற்றுக் கொடுக்கப்படும் என, கடந்த வாரம் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.
இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. சமஸ்கிருத மொழிக்கு, மத்திய அரசு முக்கியத்துவம் கொடுப்பதாக புகார் கூறப்பட்டது.
இந்நிலையில், மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ’மூன்றாம் மொழிப்பாடமாக, ஜெர்மன் தொடரும். அதை, கூடுதல் மொழிப்பாடமாகவும், பொழுதுபோக்கிற்காகவும் மாணவர்கள் படிக்கலாம்; அதற்கு எந்த தடையும் இல்லை. அந்த மொழியை கற்றுக் கொடுப்பதற்காக, ஒப்பந்த அடிப்படையில் அமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர்களும் பணியில் தொடர்வர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது

அதிக கட்டணத்தால், தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் சேர முடியாத, 28 மாணவர்கள், உச்ச நீதிமன்றத்தை அணுக, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த கல்வியாண்டில், மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களில், 28 பேருக்கு, அரசு மருத்துவக் கல்லுாரிகளில் இடம் கிடைக்கவில்லை. அவர்களுக்கு, தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தது. கல்விக் கட்டணம் அதிகமாக உள்ளதால், தனியார் கல்லுாரிகளில் சேர, அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. அதேநேரத்தில், சென்னை, வண்டலுாரில் உள்ள தாகூர் மருத்துவக் கல்லுாரி, திருச்சியில் உள்ள சென்னை மருத்துவக் கல்லுாரிக்கு, மாணவர்கள் பட்டியலை, தேர்வுக் குழு அனுப்பியது.
அதன் அடிப்படையில், மாணவர் சேர்க்கை பட்டியலை, இரண்டு கல்லுாரிகளும் வெளியிட்டன. இந்தப் பட்டியலில் இடம் பெற்றவர்கள், தங்களை விட குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் என்றும், அரசு ஒதுக்கீட்டின் கீழ், இந்த கல்லுாரிகளில் தங்களை சேர்க்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரி, உயர் நீதிமன்றத்தில் 28 பேர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
மனுக்களை விசாரித்த நீதிபதி ராமசுப்ரமணியன் பிறப்பித்த உத்தரவு: தகுதி அடிப்படையிலான பட்டியலை அனுப்புவதற்கு பதில், மனுதாரர்களைப் போன்ற தகுதியுள்ளவர்களை விட்டு விட்டு, வேறு பட்டியலை தேர்வுக்குழு அனுப்பியதாக தெரிகிறது.
விளக்க குறிப்பேட்டில், தனியார் கல்லுாரியில், அரசு ஒதுக்கீட்டின் கீழ் சேர விரும்பவில்லை என்றால், அடுத்ததாக வரும் கவுன்சிலிங்கில், அந்த கல்லுாரியில் இடம் ஒதுக்க கோர முடியாது என கூறப்பட்டுள்ளது. இதை, அரசு பின்பற்றியதாக தெரிகிறது. எனவே, தனியார் கல்லுாரிகளில் கிடைத்த இடங்களை ஏற்காதவர்களின் பெயர்களை நீக்கி விட்டு, வேறு பட்டியலை, இரண்டு கல்லுாரிகளுக்கும் அனுப்பி உள்ளது. அதனால், மனுதாரர்களை விட குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு, இரண்டு கல்லுாரிகளிலும் இடம் கிடைத்துள்ளது.
தனியார் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களுக்கு 3 லட்சம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுவே, அரசு கல்லுாரிகள் என்றால் 12 ஆயிரம் ரூபாய்தான். அதிக கட்டணம் செலுத்த முடியாததால்தான், தனியார் கல்லுாரிகளில் கிடைத்த ஒதுக்கீட்டை, மனுதாரர்களால் ஏற்க முடியவில்லை.
தகுதி பட்டியலில் இருந்து, மனுதாரர்களை நீக்கி இருக்கக்கூடாது. அவர்களை விட குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்களின் பட்டியலை அனுப்பியதன் மூலம், மனுதாரர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இரண்டு கல்லுாரிகளுக்கும் அனுப்பப்பட்ட பட்டியலை ரத்து செய்தால், புதிய குழப்பம் ஏற்படும். அந்தக் கல்லுாரிகளில் ஏற்கனவே மாணவர்கள் சேர்க்கப்பட்டு, படிப்பை துவங்கி விட்டனர்.
அந்த கல்லுாரிகளில், 84 இடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்களுக்கு பட்டியலை அனுப்பும்படி உத்தரவிட்டால், எந்த கொள்கையை அரசு பின்பற்றும் என தெரியவில்லை. காலியிடங்களில், மனுதாரர்களை சேர்க்க உத்தரவிட்டால், இவர்களை விட அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள், நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க ஆரம்பித்து விடுவர்.
எனவே, மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. மனுதாரர்கள் அல்லது இரண்டு தனியார் கல்லுாரிகள் அல்லது தேர்வுக் குழு, உச்ச நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் கோரலாம். இவ்வாறு நீதிபதி ராமசுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

உடற்கல்வி, ஓவியம், தையல், இசை போன்ற சிறப்பாசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) தேர்வு மூலமே தேர்வு செய்யப்படுவர் என, பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழக பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தையல் மற்றும் இசை என, சிறப்பாசிரியர்கள், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில், இனவாரி சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். கடந்த 2012ல், சிறப்பாசிரியர் பிரிவில், உடற்கல்வி ஆசிரியர்கள் 1,028 பேரை நியமிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்தது. வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில், மாநில அளவில் தேர்வானவர்கள் பட்டியலை வெளியிட்டது. இதை எதிர்த்து முத்துவேலன் என்பவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
விசாரணை முடிவில், சிறப்பாசிரியர் பணிக்கு, வேலைவாய்ப்பு பதிவுமூப்பு பட்டியலில் உள்ளவர்கள் மற்றும் தமிழகத்தில் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெற்று, முழு தகுதி அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும்.மேலும், எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு அமைய வேண்டும் என்றும் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, சிறப்பு ஆசிரியர்களை தேர்வுசெய்ய, புதிய விதிகளை உருவாக்க, டி.ஆர்.பி.,யிடம், தமிழக அரசு கேட்டுக் கொண்டது.
இதன்படி, டி.ஆர்.பி., அளித்த புதிய விதிமுறைகளை, பரிசீலித்த தமிழக அரசு, அவற்றை அமல்படுத்தி, அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, சிறப்பாசிரியர்கள், வேலைவாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில் அல்லாமல், டி.ஆர்.பி.,யால் நடத்தப்படும் தேர்வு அடிப்படையில் மட்டுமே நியமிக்கப்படுவர். வேலைவாய்ப்பு பதிவு மூப்பு பட்டியலில் உள்ளவர்கள் மற்றும் பத்திரிகை விளம்பரங்கள் மூலம் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படும்.
மொத்தம் 100 மதிப்பெண்களில், 95 மதிப்பெண்கள் எழுத்துத் தேர்விற்கும், 5 மதிப்பெண்கள் நேர்முகத் தேர்வுக்கும் வழங்கப்படும். ஒவ்வொரு காலியிடத்திற்கும், ஐந்து விண்ணப்பதாரர்கள், நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவர்.
மாநில, கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், பாடத்திட்டத்தை தயாரிக்கும். தேர்வு, மூன்று மணி நேரம், ஒரே தாளாக நடத்தப்படும். அப்ஜக்டிவ் அடிப்படையில், 190 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும், அரை மதிப்பெண் என 95 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
தேர்வு, நேர்முகத்தேர்வு நடத்துதல், தேர்வுத்தாள் திருத்தும் பணி, இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வர்கள் பட்டியல் வெளியிடுதல் என அனைத்து பணிகளையும் டி.ஆர்.பி., மேற்கொள்ளும். தேர்விற்கு 500 ரூபாய் கட்டணம்; உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு 250 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். இவ்வாறு  அரசாணையில் கூறப்பட்டுள்ளது