அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சிக்கான நுழைவு தேர்வு எழுத, இணையதளம் மூலம் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள தமிழக அரசின் குடிமைப் பணி தேர்வு பயிற்சி மைய முதல்நிலை பயிற்சிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் வரும் 23ம் தேதி நுழைவுத் தேர்வு நடக்கிறது.
நுழைவு தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் நுழைவுச் சீட்டுகளை மைய இணையதளம் www.civilservicecoaching.com மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்ய இயலாதவர்கள், தாங்கள் தேர்வு எழுத தெரிவு செய்துள்ள மாவட்ட தேர்வு மையத்திற்கு(மாவட்ட தேர்வு மைய விவரங்களை இணைய தளத்தில் காணவும்) தேர்வு நாள் அன்று 1 மணி நேரம் முன்னதாகவே சென்று நுழைவு சீட்டுக்களை பெற்று, தேர்வு எழுதலாம்.
சென்னை மாவட்டத்தைச் தேர்வு செய்த மாணவர்கள் பதிவிறக்கம் செய்ய இயலாதவர்கள் 044-24621475/9940636267 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தேர்வு மைய விபரங்களை பெற்றுக் கொள்ளலாம். இத்தகவலை விழுப்புரம் கலெக்டர் சம்பத் தெரிவித்துள்ளார்.

பகுதிநேர ஆசிரியர்களுக்கான சம்பளத்தை, 5,000 ரூபாயில் இருந்து, 7,000 ரூபாயாக உயர்த்தி வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.

அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ், கடந்த 2011ல், அரசு பள்ளிகளில், தையல், ஓவியம், உடற்பயிற்சி, இசை ஆகியவற்றிற்கு, 16,549 பகுதி நேர ஆசிரியர், 5,000 ரூபாய் சம்பளத்தில் நியமிக்கப்பட்டனர்.
குறைந்த சம்பளம், நீண்டதுார பயணம் உள்ளிட்ட பிரச்னைகளால், 2,000த்திற்கும் மேற்பட்டோர், ராஜினாமா செய்து விட்டனர். 2,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. தற்போது, 12 ஆயிரம் பேர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களுக்கான சம்பளம் 7,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என, கடந்த ஏப்ரலில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், அமலுக்கு வரவில்லை.
இதுகுறித்து, சில நாட்களுக்கு முன், அனைத்து பகுதிநேர ஆசிரியர்களும், கல்வித்துறை செயலர் சபிதாவிடம், கோரிக்கை மனு கொடுத்தனர்.
அதையடுத்து, சபிதா வெளியிட்ட உத்தரவில், "அனைத்து பகுதிநேர ஆசிரியர்களுக்கும், கடந்த ஏப்., முதல், 7,000 ரூபாய் சம்பளம் என கணக்கிட்டு, நிலுவை தொகையுடன் வழங்கப்படும்" என தெரிவித்துள்ளார்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மூன்றாம் மொழிப்பாடமாக ஜெர்மன் தொடரும்’ என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மூன்றாம் மொழிப்பாடமாக இருந்த அயல்நாட்டு மொழியான ஜெர்மன் மாற்றப்பட்டு, சமஸ்கிருதம் கற்றுக் கொடுக்கப்படும் என, கடந்த வாரம் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.
இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. சமஸ்கிருத மொழிக்கு, மத்திய அரசு முக்கியத்துவம் கொடுப்பதாக புகார் கூறப்பட்டது.
இந்நிலையில், மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ’மூன்றாம் மொழிப்பாடமாக, ஜெர்மன் தொடரும். அதை, கூடுதல் மொழிப்பாடமாகவும், பொழுதுபோக்கிற்காகவும் மாணவர்கள் படிக்கலாம்; அதற்கு எந்த தடையும் இல்லை. அந்த மொழியை கற்றுக் கொடுப்பதற்காக, ஒப்பந்த அடிப்படையில் அமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர்களும் பணியில் தொடர்வர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது