வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு கருதி, அரசு பள்ளிகளில், சேதமடைந்த கட்டடங்களில் வகுப்புகளை நடத்த வேண்டாம் என, பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது.பல்வேறு பகுதிகளில் அரசு பள்ளி கட்டட மேற்கூரை பெயர்ந்து, சுவர்களில் கீறல் விழுந்து பராமரிப்பின்றி, சேதமடைந்த நிலையில் உள்ளன. அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், அக்கட்டடங்களில் வகுப்புகளை நடத்த வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.மாவட்ட கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: துவக்க முதல் மேல்நிலை வரை அனைத்து அரசு பள்ளி கட்டடங்களின் நிலை குறித்தும், பொதுப்பணித்துறை இன்ஜினியர்களின் உதவியுடன் ஆய்வு செய்ய தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி சேதமடைந்த கட்டடங்களில் வகுப்புகள் நடத்த வேண்டாம்.அங்கு நடத்தப்படும் வகுப்புகளை வேறு பகுதிக்கு மாற்றவும், பள்ளிகளில் புதிதாக கட்டடங்கள் கட்டப்பட்டிருந்தால் அதன் திறப்பு விழாவிற்காக காத்திருக்காமல், துறை உயர் அதிகாரிகளின் முறையான அனுமதி பெற்று பயன்படுத்திக்கொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.பள்ளி அருகே தாழ்வாக செல்லும் மின் வயர்கள், உயர் மின்அழுத்த கம்பிகளை உடனடியாக மாற்றி அமைக்க, வளாகத்தில் மழைநீர் தேங்கவிடாமல் பார்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.
வெளிநாட்டு மாணவர்களுக்கு மலிவான கல்வி கேந்திரமாக இந்தியா திகழ்வதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
வெளிநாட்டு மாணவர்களுக்கு மலிவான கல்வி கேந்திரமாக இந்தியா திகழ்வதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இப்பட்டியலில், அதிக செலவு மிகுந்த கல்வி கேந்திரமாக ஆஸ்திரேலியா குறிப்பிடப்பட்டுள்ளது.இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது: சர்வே நடத்தப்பட்ட 15 நாடுகளில், துருக்கி, சீனா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவே, உயர்கல்விக்கென குறைந்த கட்டணம் வசூலிக்கும் நாடாக திகழ்கிறது.இந்தியாவில், ஒரு இளநிலைப் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் வெளிநாட்டு மாணவர், பல்கலைக்கழக கட்டணம் மற்றும் வாழ்க்கைச் செலவினங்கள் என்று சராசரியாக, ஆண்டிற்கு 5,642 அமெரிக்க டாலர்களை செலவழிக்கிறார். ஆனால், அவர் ஆஸ்திரேலியாவில் அதே காலகட்டத்திற்கு, அதே செலவினமாக 42,093 அமெரிக்க டாலர்களை செலவழிக்க வேண்டும்.சர்வே நடத்தப்பட்ட 15 நாடுகளில், தரமான கல்வியை வழங்கும் நாடுகளின் வரிசையில், இந்தியா 8ம் இடத்தைப் பெறுகிறது. சர்வேயில் கலந்துகொண்டவர்களில், 5% பேர், தங்களின் முதல் 3 விருப்ப நாடுகளில் ஒன்றாக இந்தியாவை தேர்வு செய்தனர்.ஆசிய மாணவர்கள் படிக்கச் செல்வதற்காக அதிகம் விரும்பும் நாடுகளில், ஆஸ்திரேலியா முதலிடத்தைப் பெறுகிறது. இது மிகவும் செலவு வாய்ந்த ஒரு நாடாக திகழ்கிறது. இதற்கடுத்த 2 இடங்களில், முறையே, சிங்கப்பூரும், அமெரிக்காவும் வருகின்றன.இந்த சர்வேயின்படி, பிரிட்டனில் ஒரு வெளிநாட்டு மாணவர், ஆண்டிற்கு 35,045 அமெரிக்க டாலர்களை செலவு செய்ய வேண்டியிருக்கும். பிரேசில் நாட்டில் 12,627 அமெரிக்க டாலர்களும், சீனாவில் 10,729 அமெரிக்க டாலர்களும், மெக்சிகோவில் 9,460 டாலர்களும் செலவழிக்க வேண்டும்.இந்திய பெற்றோர்களில் 47% பேர், தரமான உயர்கல்வி வழங்கும் நாடாக பிரிட்டனையும், 47% ஆஸ்திரேலியாவையும் தேர்வுசெய்யும் வேளையில், 46% பேர் தமது தாய்நாட்டையே தேர்வு செய்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.15 நாடுகளில், 4,500க்கும் மேற்பட்ட பெற்றோர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சர்வேயின்படி, மேற்கூறிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும், இம்மாதம் 29ம் தேதிக்குள் பயிற்சி கையேடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் தேர்வு செய்யப்பட்ட பகுதிகளை படித்து அதிக மதிப்பெண் பெறும் வகையில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் தயாரிக்கப்பட்ட பயிற்சி கையேடு வழங்கப்படும்.அதில் ஒவ்வொரு பாடத்திலும் எந்த பகுதி முக்கியமானது. அடிக்கடி கேட்கப்பட்ட வினாக்கள் உள்ளிட்ட தகவல்கள் இருக்கும்.இந்த கையேடு அரசு பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் மூலம் அனுப்பப்படும். இம்மாதம் 29ம் தேதிக்குள் மாணவர்களுக்கு வழங்கிவிட வேண்டும் என, பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.
Subscribe to:
Posts (Atom)