நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள், மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லுாரிகளை யு.ஜி.சி., (பல்கலைக்கழக மானிய குழு) கண்காணித்து முறைப்படுத்தி வருகிறது. நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் யு.ஜி.சி., கட்டுப்பாட்டில் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
கடந்த 2009ம் ஆண்டு, நாடு முழுவதும் உள்ள நிகர்நிலை பல்கலைக்கழகங்களை ஆய்வுசெய்த டான்டன் தலைமையிலான யு.ஜி.சி., கமிட்டி, 41 நிகர்நிலை பல்கலைக்கழகங்களை தகுதி பட்டியலில் இருந்து நீக்கியது.
இதனை எதிர்த்து நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் கோர்ட்டிற்கு சென்றன. இதனையடுத்து, மறுஆய்வு செய்த பல்கலைக்கழக மானியக் குழு, தற்போது 34 நிகர்நிலை பல்கலைக்கழகங்களை மீண்டும் தகுதி பட்டியலில் சேர்த்துள்ளது.
ஏழு நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மட்டும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளன. இதில், நான்கு நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் தமிழகத்தை சேர்ந்தவை. தகுதிநீக்கம் செய்யப்பட்ட இரண்டு நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் கீழ் செயல்படும் இரு மருத்துவக் கல்லுாரிகள் புதுச்சேரியில் உள்ளன.
இந்த கல்லுாரிகளிலும், அண்மையில் சென்டாக் மூலமும், நிர்வாக ஒதுக்கீட்டின் கீழும் மாணவர் சேர்க்கை நடந்துள்ள சூழ்நிலையில், புதுச்சேரி மாணவர்களுக்கு சிக்கல் ஏற்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
யு.ஜி.சி., உத்தரவை தொடர்ந்து, புதுச்சேரியில் இரண்டு கல்லுாரிகள் நிகர்நிலை பல்கலைக்கழக அஸ்தஸ்தை இழப்பதால், வருங்காலங்களில் யார் தேர்வை நடத்துவர், எந்த பல்கலைக்கழகங்களின் கீழ், உறுப்பு கல்லுாரிகளாக செயல்படும் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து கல்வியாளர்கள் கூறும்போது, "நிகர்நிலை பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்யும் வழிமுறைகள், பல்கலைக்கழக மானிய குழுவினால் தெளிவாக வரையறை செய்யப்பட்டுள்ளது. யு.ஜி.சி., சட்டப்பிரிவு 4 முதல் 16ன் படி நிகர்நிலை பல்கலைக்கழகங்களை நேரில் ஆய்வுசெய்ய வேண்டும்.
ஆனால் யு.ஜி.சி., குழுவினர் வீடியோ கான்ஸ்பரஸ் மூலமாக ஆய்வு நடத்தி முடிவுகளை அவசரமாக வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக, கோர்ட்டின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதால், புதுச்சேரி மாணவர்கள் பயப்பட தேவையில்லை" என்றனர்.