25 மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள 128 குடியிருப்புப் பகுதிகளில் 128 புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

25 மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள 128 குடியிருப்புப் பகுதிகளில் 128 புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். 
கல்வியின் அடித்தளமாக விளங்குவது தொடக்கக் கல்வி என்பதைக் கருத்தில் கொண்டு, நடப்புக் கல்வியாண்டில், 25 மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் அதிகம் உள்ள 128 குடியிருப்புப் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தக் குடியிருப்புப் பகுதிகளில், தலா ஒரு தொடக்கப் பள்ளி வீதம் 128 புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்கப்படும்.  ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் ஓர் இடைநிலை ஆசிரியர் என மொத்தம் 256 ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள். 
நடப்பாண்டில் 19 மாவட்டங்களில் 42 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக, நிலை உயர்த்தப்படும் . இவ்வாறு நிலை உயர்த்தப்படும் ஒவ்வொரு பள்ளிக்கும் 3 பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் 126 ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படுவதோடு,
நடப்புக் கல்வியாண்டில், 50 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும்.  உயர்நிலைப் பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 50 தலைமை ஆசிரியர் பணியிடங்களும், 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் என மொத்தம் 300 ஆசிரியர் பணியிடங்கள் பணி நிரவல் மூலம் நிரப்பப்படும்.
நடப்புக் கல்வியாண்டில் 100 அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும். இவ்வாறு நிலை உயர்த்தப்படும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 100 தலைமை ஆசிரியர் பணியிடங்கள், ஒன்பது முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 1000 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்
வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ, வருவாய் இன்மை காரணமாக பள்ளியில் கல்வி கற்கும் அவர்களது குழந்தைகள் கல்வியை தொடர்ந்து கற்க இயலாத நிலை ஏற்படும் சமயத்தில், அவர்களது குழந்தைகள் தங்களது கல்வியை தொடர்ந்து கல்வி கற்கும் வகையில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ, மாணவியர், ஒவ்வொருவருக்கும் 50,000 ரூபாய் நிதி வழங்கும் திட்டம் 2005 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
இந்தத் தொகை இனி 75,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் 
தொலைதூர மற்றும் மலைப் பகுதிகளில் வாழும் நலிவடைந்த வகுப்பினைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் கல்வி வழங்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில், நடப்பாண்டில், 500 குழந்தைகள் பயன்பெறும் வகையில் 5 உண்டு உறைவிடப் பள்ளிகள் நீலகிரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அமைக்கப்படும். இப்பள்ளிகளுக்கு 5 முழு நேர ஆசிரியர்கள் மற்றும் 3 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.