அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. தலைவர் மற்றும் எட்டு உறுப்பினர் பதவிகளை நிரப்புவதில் தொடர் இழுபறி ஏற்பட்டுள்ளது. காலி பணி இடங்களை நிரப்ப எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் பதவிகளை எதிர்பார்த்து காத்து இருப்பவர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.தமிழக அரசு துறைகளுக்கு தேவையான அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை தேர்வு செய்வதில் டி.என்.பி.எஸ்.சி. முதலிடம் வகிக்கிறது. ஆண்டு முழுவதும் பல்வேறு போட்டி தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்கிறது.இந்த அமைப்பின் தலைவராக இருந்த நவநீத கிருஷ்ணன் சமீபத்தில் அ.தி.மு.க. சார்பில் ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினரான பாலசுப்ரமணியன் தலைவர் பதவியை கூடுதலாக கவனித்து வருகிறார்.நவநீதகிருஷ்ணன் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட அடுத்த ஓரிரு நாட்களில் புதிய தலைவர் நியமன அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை புதிய தலைவர் நியமிக்கவில்லை. உறுப்பினர் பதவிகளும் அதிக அளவில் காலியாக உள்ளன.ஷோபினி, ஜேசுராஜா, ராஜா உட்பட ஏழு பேரின் பதவிகாலம் முடிந்ததால் இந்த பதவிகள் காலியாக உள்ளன. தற்போதைய நிலையில் கூடுதல் பொறுப்பாக தலைவர் பணிகளைச் செய்யும் பாலசுப்ரமணியன், பன்னீர் செல்வம், ரத்னசபாபதி, பெருமாள்சாமி, குப்புசாமி, செல்வமணி ஆகிய ஆறு பேர் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளனர்.எந்த பதவிகளும் நிரப்பப்படாததால் தேர்வாணைய பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக துறை வட்டாரம் தெரிவிக்கிறது. 192 சிவில் நீதிபதி பணியிடங்களை நிரப்ப அரசு அனுமதி வழங்கி ஐந்து மாதங்களுக்கு மேல் ஆகிறது. ஆனால் இதுவரை போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகவில்லை.டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் உதவியாளர் பணி இடங்கள் அதிகளவில் காலியாக இருப்பதாகவும் துறை வட்டாரம் தெரிவிக்கிறது. இதன் காரணமாகவும் ஏராளமான கோப்புகள் தேங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள், அரசின் தாமதத்தால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.62 வயது அல்லது பதவி ஏற்றதில் இருந்து ஆறு ஆண்டுகள் முடியும் வரை மட்டுமே பதவியில் நீடிக்க முடியும் என்பதால் பதவிகளை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் தவியாய் தவித்து வருகின்றனர்.