இடைநிலை ஆசிரியர் முதல்தாள் தேர்வில் தேர்ச்சி பெற்ற 31 ஆயிரம் பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண் விவரங்களை, ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டது.டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்) தேர்வுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் ஏற்கனவே வெளியிடப்பட்டு, அது தொடர்பாக தேர்வர்கள் தரப்பில் இருந்து குறைகளை பெற்று நிவர்த்தி செய்யும் பணிகளும் முடிந்து விட்டன. தற்போது, இறுதி தேர்வு பட்டியல் வெளியிட தயார் நிலையில் உள்ளது.இந்நிலையில், முதல்தாள் (இடைநிலை ஆசிரியர்) தேர்வில் தேர்ச்சி பெற்ற, 31,079 பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண் (இறுதி மதிப்பெண்) விவரங்களை, www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) வெளியிட்டது.தேர்வர்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில், 100 மதிப்பெண்ணுக்கு, தங்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் விவரங்களை அறிந்து கொள்ளலாம். இதில், குறை ஏதேனும் இருந்தால், வரும் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடக்கும் குறை தீர்ப்பு முகாமில் பங்கேற்று, உரிய ஆதாரங்களை காட்டி நிவாரணம் பெறலாம்.சான்றிதழ் சரிபார்ப்பு: இதுவரை நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காத தேர்வர்களுக்கும், இறுதியாக, ஒரு வாய்ப்பை, டி.ஆர்.பி., வழங்கி உள்ளது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு முகாம் வரும் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடக்கிறது.குறைதீர்ப்பு முகாம் நடக்கும் மையங்களின் முகவரி விவரம் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு முகாம்கள் நடக்கும் மையங்களின் விவரம் ஆகியவையும் டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த முகாம்கள் நடந்தபின் தேர்வு பட்டியல் வெளியிடப்படும்.