பல்கலைக்கு ஏ கிரேடு அங்கீகாரம் கிடைக்குமா என்பது இம்மாத இறுதிக்குள் தெரியும். பல்கலை மற்றும் கல்லூரிகளை ஆய்வு செய்து அவற்றின் உள்கட்டமைப்பு வசதிகள் பாடத் திட்டம், கற்பித்தல் திறன், தகுதியான ஆசிரியர், ஆராய்ச்சி திட்டங்கள் உள்ளிட்ட பல வகை அம்சங்களையும் குறிப்பெடுத்து ஒவ்வொன்றிற்கும் மதிப்பெண் அடிப்படையில் கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகார சான்றிதழை நாக் அமைப்பு வழங்குகிறது.யு.ஜி.சி. (பல்கலை மானிய குழு) கீழ் இயங்கும் நாக் அமைப்பு உயர்கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்து ஏ, பி, சி, டி என நான்கு வகைகளில் அங்கீகார சான்றிதழ் வழங்குகிறது. டி வகையில் வரும் கல்வி நிறுவனங்களை நாக் அங்கீகரிக்காது.இதர மூன்று பிரிவுகளில் வரும் கல்வி நிறுவனங்களை நாக் அங்கீகரித்து சான்றிதழ் வழங்குகிறது. நாக் அங்கீகாரம் பெற்றால் யு.ஜி.சி.யின் நிதி உதவிகள் தாராளமாக கிடைக்கும். இதனால் உயர்கல்வி நிறுவனங்கள் நாக் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கின்றன.ஒரு முறை பெறும் அங்கீகாரம் ஐந்தாண்டுகள் வரை செல்லத்தக்கது. அண்ணா பல்கலைக்கு நாக் அமைப்பு ஏற்கனவே வழங்கிய ஏ கிரேடு அங்கீகாரம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. எனவே அப்பல்கலை மீண்டும் விண்ணப்பித்ததன் அடிப்படையில் பாட்டின் என்பவர் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழு நேற்று முன்தினம் முதல் அண்ணா பல்கலையில் ஆய்வு செய்து வருகிறது.இது குறித்து அண்ணா பல்கலை வட்டாரம் கூறியதாவது: இரு முன்னாள் துணைவேந்தர்கள் மற்றும் ஏழு உயர் அலுவலர்கள் என ஒன்பது பேர் கொண்ட குழு ஆய்வு செய்து வருகிறது. 26ம் தேதி வரை ஆய்வு தொடரும். ஆய்வு அறிக்கையை யு.ஜி.சி.யிடம் வழங்குவர். அதன்பின் ஓரிரு நாளில் அண்ணா பல்கலைக்கு எந்த வகையான சான்றிதழ் கிடைக்கும் என்பது தெரிய வரும். அண்ணா பல்கலைக்கு உயர்ந்தபட்ச அங்கீகாரமான ஏ கிரேடு அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகிறோம். இவ்வாறு பல்கலை வட்டாரம் தெரிவித்தது.
"சிலப்பதிகாரத்தின் புகழ் பரப்புவோருக்கு தமிழ் புத்தாண்டு அன்று இளங்கோவடிகள் விருது வழங்கப்படும்" என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சட்டசபையில் நேற்று 110வது விதியின் கீழ் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:இளங்கோவடிகள் நடையையொட்டி, புதிய காப்பியம் படைப்போருக்கோ, சிலப்பதிகாரத்தின் புகழ் பாடுவோருக்கோ, இளங்கோவடிகள் விருது வழங்கப்படும். தமிழ் புத்தாண்டு அன்று வழங்கப்படும் இந்த விருது 1 லட்சம் ரூபாய் ரொக்கம், 1 சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை ஆகியவற்றை உள்ளடக்கியது.* தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபடும் ஆர்வலர்களைக் கண்டறிந்து அவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் தமிழ் செம்மல் விருதுகள் வழங்கப்படும். இந்த விருதுக்கு மாவட்டத்துக்கு ஒருவர் தேர்வு செய்யப்படுவர். இது 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம், தகுதியுரை விருது உள்ளடக்கியது.* தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் 15 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்.*சென்னை உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் சுடுமண், சுதை சிற்பம், மரம், கல், உலோகம் ஆகியவற்றைக் கொண்டு படிமங்களாக வடிவமைத்த கலைப் பொருட்களைக் கொண்டு பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடம் 2.50 கோடி ரூபாயில் அமைக்கப்படும். இவ்வாறு அவர் அறிவித்தார்.
டி.என்.பி.எஸ்.சி. பதவிகளை நிரப்புவதில் இழுபறி
அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. தலைவர் மற்றும் எட்டு உறுப்பினர் பதவிகளை நிரப்புவதில் தொடர் இழுபறி ஏற்பட்டுள்ளது. காலி பணி இடங்களை நிரப்ப எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் பதவிகளை எதிர்பார்த்து காத்து இருப்பவர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.தமிழக அரசு துறைகளுக்கு தேவையான அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை தேர்வு செய்வதில் டி.என்.பி.எஸ்.சி. முதலிடம் வகிக்கிறது. ஆண்டு முழுவதும் பல்வேறு போட்டி தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்கிறது.இந்த அமைப்பின் தலைவராக இருந்த நவநீத கிருஷ்ணன் சமீபத்தில் அ.தி.மு.க. சார்பில் ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினரான பாலசுப்ரமணியன் தலைவர் பதவியை கூடுதலாக கவனித்து வருகிறார்.நவநீதகிருஷ்ணன் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட அடுத்த ஓரிரு நாட்களில் புதிய தலைவர் நியமன அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை புதிய தலைவர் நியமிக்கவில்லை. உறுப்பினர் பதவிகளும் அதிக அளவில் காலியாக உள்ளன.ஷோபினி, ஜேசுராஜா, ராஜா உட்பட ஏழு பேரின் பதவிகாலம் முடிந்ததால் இந்த பதவிகள் காலியாக உள்ளன. தற்போதைய நிலையில் கூடுதல் பொறுப்பாக தலைவர் பணிகளைச் செய்யும் பாலசுப்ரமணியன், பன்னீர் செல்வம், ரத்னசபாபதி, பெருமாள்சாமி, குப்புசாமி, செல்வமணி ஆகிய ஆறு பேர் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளனர்.எந்த பதவிகளும் நிரப்பப்படாததால் தேர்வாணைய பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக துறை வட்டாரம் தெரிவிக்கிறது. 192 சிவில் நீதிபதி பணியிடங்களை நிரப்ப அரசு அனுமதி வழங்கி ஐந்து மாதங்களுக்கு மேல் ஆகிறது. ஆனால் இதுவரை போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகவில்லை.டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் உதவியாளர் பணி இடங்கள் அதிகளவில் காலியாக இருப்பதாகவும் துறை வட்டாரம் தெரிவிக்கிறது. இதன் காரணமாகவும் ஏராளமான கோப்புகள் தேங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள், அரசின் தாமதத்தால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.62 வயது அல்லது பதவி ஏற்றதில் இருந்து ஆறு ஆண்டுகள் முடியும் வரை மட்டுமே பதவியில் நீடிக்க முடியும் என்பதால் பதவிகளை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் தவியாய் தவித்து வருகின்றனர்.
Subscribe to:
Posts (Atom)