இன்று காலை 9 மணிமுதல் , கால்நடை மருத்துவம் தொடர்பான இளநிலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்

கால்நடை மருத்துவம் தொடர்பான இளநிலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், இன்று காலை 9 மணிமுதல் சென்னையில் நடைபெறுகிறது. மொத்தம் 3 நாட்கள் இந்த கவுன்சிலிங் நடைபெறுகிறது.
ஜுலை 30ம் தேதி காலை 9 மணி முதல்:
BVSc & AH படிப்பில், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டுப் பிரிவினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பிள்ளைகள் ஆகியோருக்கான கவுன்சிலிங்
காலை 11 மணிமுதல்:
BVSc & AH படிப்பிற்கு, பள்ளிப் படிப்பில் தொழிற்பிரிவு படித்தவர்களுக்கான கவுன்சிலிங். மாணவர்களின் இனப்பிரிவு கட்-ஆப் மதிப்பெண் வாரியாக இந்த கவுன்சிலிங் நடைபெறுகிறது.
ஜுலை 31ம் தேதி:
BVSc & AH படிப்புகளுக்கு, பள்ளி படிப்பில் அகடமிக் பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங். இது முதல் batch கவுன்சிலிங் ஆகும். இங்கும், இனப்பிரிவுக்கேற்ற கட்-ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் கவுன்சிலிங் நடத்தப்படும்.
மதியம் 2 மணிமுதல்: அதே அகடமிக் பிரிவு மாணவர்களுக்கு, BVSc & AH படிப்பிற்கான, இரண்டாம் batch கவுன்சிலிங் நடத்தப்படும்.
ஆகஸ்ட் 1ம் தேதி:
காலை 9 மணிக்கு:  பி.டெக்., உணவு தொழில்நுட்பம் மற்றும் பி.டெக்., கோழி வளர்ப்பு தொழில்நுட்பம் ஆகிய படிப்புகளில், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டுப் பிரிவினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பிள்ளைகள் ஆகியோருக்கான கவுன்சிலிங் நடைபெறும்.
 காலை 11 மணிமுதல்: மேற்கூறிய இரண்டு படிப்புகளுக்கும், பொதுப்பிரிவு கவுன்சிலிங் நடைபெறும்.
விரிவான விபரங்களை அறிய : http://www.tanuvas.tn.nic.in/ugadmission/counselling.html.

தமிழகத்தில், மாணவர்களின் இடைநிற்றல் (டிராப் அவுட்ஸ்) விகிதம் குறைந்து விட்டதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், மாணவர்களின் இடைநிற்றல் (டிராப் அவுட்ஸ்) விகிதம் குறைந்து விட்டதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.கல்வித்துறை புள்ளி விவரப்படி, 2001 - 02ல், தொடக்கநிலை வகுப்பில், மாணவர் இடைநிற்றல் 12 சதவீதமாக இருந்தது, 2013 - 14ல், 0.95 சதவீதமாக குறைந்துவிட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.நடுநிலை வகுப்புகளில், 2001 - 02ல், 13 சதவீதமாக இருந்த இடைநிற்றல், 2013 - 14ல், 1.65 சதவீதமாக குறைந்துவிட்டதாகவும், கல்வித் துறை தெரிவித்துள்ளது. ஆரம்ப, நடுநிலை வகுப்புகளில், மாணவர் சேர்க்கை 99 சதவீதமாக இருப்பதாகவும், கல்வித் துறை தெரிவித்துள்ளது."மாணவர்களுக்கு, இலவச நோட்டு புத்தகம், பாடப் புத்தகம், இலவச சைக்கிள், லேப் - டாப் உட்பட, 14 வகையான இலவச திட்டங்கள் வழங்கப்படுவதால், மாணவர்கள் உற்சாகமாக இருக்கின்றனர். இதன் காரணமாக, கிராமப்புறங்களில், பள்ளி இடைநிற்றல் அளவு கணிசமாக குறைந்துவிட்டது" என கல்வித் துறை வட்டாரம் கூறுகிறது.இதுகுறித்து, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது: இடைநிற்றல் குறித்தும், முழுமையான அளவில், அனைத்து குழந்தைகளும் பள்ளிகளில் சேர்ந்தார்களா என்பது குறித்தும், கல்வித்துறை அல்லாத பிற அமைப்புகளிடம் முழுமையான புள்ளி விவரம் இருக்கிறதா என தெரியவில்லை.இடைநிற்றல் விகிதம் குறைந்திருப்பது சரியாக இருக்கலாம். ஆனால், பள்ளி சேராத தெருவாழ் சிறார்கள், இன்றும் அதிகளவில் இருக்கின்றனர். சென்னையிலேயே பல குடிசை பகுதிகள் உள்ளன. அங்குள்ள சிறுவர்கள் அனைவரும் கல்வி கற்கின்றனர் என்பதை உறுதியாக கூற முடியாது.எனவே, தெருவாழ் சிறுவர்கள், குடிசை பகுதிகளில் வாழும் சிறுவர்கள் மற்றும் பிழைப்பிற்காக, ஒரு பகுதியில் இருந்து, மற்றொரு பகுதிக்கு குடியேறிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் ஆகிய அனைவரையும், ஆரம்பப் பள்ளிகளில் சேர்ப்பதை, கல்வித் துறை உறுதி செய்ய வேண்டும்.அத்துடன், அவர்கள், தொடர்ந்து கல்வி கற்பதையும் கண்காணிக்க வேண்டும். இதை செய்தால்தான், மாணவர் சேர்க்கையில் 100 சதவீதத்தை எட்ட முடியும். இவ்வாறு பிரின்ஸ் தெரிவித்தார்

தமிழகத்தில், சித்த, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் நாளை(ஜுலை 30) முடிகிறது.

தமிழகத்தில், சித்த, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் நாளை(ஜுலை 30) முடிகிறது.இதுவரை, 3,525 பேர் விண்ணப்பங்களை பெற்றுள்ளனர். தமிழகத்தில், சென்னை, மதுரை, பாளையங்கோட்டை மற்றும் நாகர்கோவிலில் சித்த, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய மருத்துவம் சார்ந்த ஆறு அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.சித்தா பி.எஸ்.எம்.எஸ்., ஆயுர்வேதம் பி.ஏ.எம்.எஸ்., யுனானி பி.யு.எம்.எஸ்., நேச்சுரோபதி மற்றும் யோகா பி.என்.ஓய்.எஸ்., மற்றும் ஓமியோபதி பி.எச்.எம்.எஸ்., படிப்புகளுக்கு 296 இடங்கள் உள்ளன. இதுதவிர, சுயநிதி கல்லூரிகளில் இருந்து, மாநில ஒதுக்கீட்டுக்கு 900 இடங்கள் வரை கிடைக்கும். இந்த படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப வினியோகம் 14ம் தேதி துவங்கியது.இரண்டு வாரங்கள் ஆன நிலையில், இதுவரை 3,525 பேர், விண்ணப்பங்களை பெற்றுள்ளனர். இதில், 2,510 விண்ணப்பங்கள் வந்துள்ளன.இதுகுறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்க அதிகாரி ஒருவர் கூறுகையில், "விண்ணப்பங்கள் பெற, 30ம் தேதி கடைசி நாள். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், 31ம் தேதிக்குள் வர வேண்டும். முன்கூட்டியே விண்ணப்பித்து இருந்தாலும், தாமதமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. மேலும் விவரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்" என்றார்.