ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில், பொறியியல் சேர்வதற்காக நடத்தப்படும் ஜெ.இ.இ., மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் டிசம்பர் 18 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முழுவதும் ஆன்லைன் முறையிலேயே விண்ணப்பிக்க வேண்டும்.
www.jeemain.nic.in என்ற இணையதளம் சென்று, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். JEE தேர்வு, Main மற்றும் Advanced என்ற இரு நிலைகளில் நடத்தப்படுகிறது.
JEE (Main) தேர்வைப் பொறுத்தளவில், பி.டெக்., பி.இ., ஆகிய படிப்புகளில் சேர, paper - I எழுத வேண்டும். பி.ஆர்க்., மற்றும் பி.பிளானிங் ஆகிய படிப்புகளில் சேர, paper - II எழுத வேண்டும். இத்தேர்வுகளுக்கான syllabus மாறுபட்டவை.
Paper - I தேர்வு, ஆன்லைன் அல்லது ஆப்லைன் ஆகிய 2 முறைகளிலும், paper - II தேர்வு, ஆப்லைன் முறையிலும் மட்டுமே நடத்தப்படுகின்றன.
Paper - I மற்றும் II -க்கான ஆப்லைன் தேர்வு நடைபெறும் தேதி - ஏப்ரல் 4, 2015.
Paper - I க்கான ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி - ஏப்ரல் 10, 2015.
இரண்டு தேர்வுகளுக்குமான காலஅளவு - 3 மணி நேரங்கள். இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இத்தேர்வு நடத்தப்படவுள்ளது.
2012, 2013ம் ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்தவர்கள் அல்லது 2015ம் ஆண்டு எழுதவுள்ளோர் விண்ணப்பிக்கலாம். அதேசமயம், 2012ம் ஆண்டு அல்லது அதற்கு முன்னதாக பிளஸ் 2 முடித்தவர்களுக்கு விண்ணப்பிக்க தகுதியில்லை.
தேர்ச்சிப்பெறும் பொருட்டு, JEE (Main) தேர்வை அதிகபட்சம் 3 முறை மட்டுமே எழுத முடியும்.
அனைத்து விரிவான தகவல்களுக்கும் www.jeemain.nic.in.

முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, என்ன என்பது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவான அறிவிப்பை வெளியிடாததால், விண்ணப்பதாரர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

 தமிழகத்தில், காலியாக உள்ள 1,807 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, இம்மாதம் 7ம் தேதி, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. ஜன., 10ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்காக, இம்மாதம் 10ம் தேதி முதல், 26ம் தேதி வரை, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் மூலம், விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
26ம் தேதி மாலை: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, வரும் 26ம் தேதி மாலை 5:00 மணிக்குள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நேரில் ஒப்படைக்க வேண்டும். அதன்படி, விண்ணப்பங்களை ஆயிரக்கணக்கானோர் பெற்று, பூர்த்திசெய்து சமர்ப்பித்து வருகின்றனர்.
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க, முதுநிலை பட்ட மேற்படிப்புடன், பி.எட்., படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு படித்திருக்க வேண்டும் என தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆனால், முதுநிலை படிப்பு மற்றும் பி.எட்., படிப்புக்கு, இணையான கல்வித் தகுதிகள் எவை எவை என்ற தகவலை, ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவாக தெரிவிக்கவில்லை என, முதுநிலை கல்வி படித்தவர்கள் புகார் கூறியுள்ளனர்.
இதுகுறித்து, விண்ணப்பதாரர்கள் சிலர் கூறியதாவது: இணையான கல்வித்தகுதி உள்ள பட்டப் படிப்பு என்ன என்பதே, எங்களுக்கு தெரியாமல் உள்ளது. இதற்கான அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிடவில்லை. அதனால், குழப்பம் நீடிக்கிறது. நாங்கள் பல்வேறு நிலையில் குழம்பி, முதன்மை கல்வி அலுவலகங்களை அணுகும்போது, சரியான பதில் அங்கும் கிடைக்கவில்லை. இதனால், இந்த தேர்வுக்கு, கல்வித்தகுதி பெற்றிருக்கிறோமா என தெரியாமலேயே, விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து அளித்து வருகிறோம்.
அறிவிப்பு வெளியிடும்போதே, தேர்வுக்கு இணையான படிப்புகள் என்ன என்பதை வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு வெளியிடாமல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதால், எங்களுக்கு விண்ணப்ப படிவத்திற்கான பணம் வீணாகுமோ என்ற கவலையுடனே விண்ணப்பித்துள்ளோம். எனவே, உடனடியாக முதுநிலை ஆசிரியர் தேர்விற்கு, இணையான கல்வி தகுதி என்ன என்ற அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பயன்படாது போகின்றனவா மாணவர்களுக்கான நடமாடும் உளவியல் மையங்கள்

மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்றபடி அல்லாமல், சொற்ப எண்ணிக்கையில், உளவியல் நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், நடமாடும் உளவியல் மையம் பயனின்றி போவதாக, பள்ளி ஆசிரியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
பள்ளி மாணவர்களின் மன அழுத்தம், உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் பொருட்டு, நடமாடும் உளவியல் ஆலோசனை மையம், தமிழகத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
இதற்காக, தமிழகத்தில் 10 மண்டலங்கள் பிரிக்கப்பட்டு, ஒரு மண்டலத்தில் குறைந்தபட்சம் மூன்று மாவட்டங்களும், அதிகபட்சமாக நான்கு மாவட்டங்களும் அடங்கும். ஒவ்வொரு மண்டலத்திற்கும், தலா ஒரு உளவியல் ஆலோசகர் வீதம் மொத்தம் 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், மூன்று பெண்களும், ஏழு ஆண் உளவியல் நிபுணர்களும் உள்ளனர்.
கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களை ஒருங்கிணைத்து, ஒரு மண்டலமாக பிரித்து, மாணவ, மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, மாநிலம் முழுவதும் தேர்வில் தேர்ச்சி பெறுவது எப்படி என்பது குறித்து மட்டுமே 80 சதவீத ஆலோனைகள் வழங்கப்படுகிறது.
பாலியல் வன்கொடுமை பாதுகாப்பு, உடல்ரீதியான மாற்றங்கள் போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வுகாண, உளவியல் நிபுணர்கள் அமர்த்தப்பட்டாலும், அதில் பெரிதாக பலனில்லை என்பதே உண்மை.
ஆண் உளவியல் நிபுணர்கள் பணியமர்த்தப்பட்டுள்ள மண்டலங்களில் மாணவிகளும், பெண் உளவியல் நிபுணர்கள் உள்ள மண்டலங்களில் மாணவர்களும், தங்கள் பாலியல் ரீதியான குழப்பங்களுக்கு விளக்கங்களை வெளிப்படையாக கேட்கவும், தெரிந்து கொள்ளவும் தயங்குகின்றனர்.
மேலும், இதுபோன்ற மாணவர்களுக்கு தொடர் கவுன்சிலிங் வழங்க வேண்டியது அவசியம். ஆனால், மூன்று அல்லது நான்கு மாவட்டங்களுக்கு ஒரு உளவியல் நிபுணர் மட்டுமே உள்ளதால், மாணவர்களின் தனிப்பட்ட பிரச்னைகளின் மீது கவனம் செலுத்த இயலவில்லை என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "வளர் இளம் பருவத்தில் உள்ள மாணவர்கள் பாலியல் மற்றும் உடல்ரீதியான பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். பெற்றோர்களிடமோ, ஆசிரியர்களிடமோ சொல்ல தயங்குகின்றனர்.
ஆனால், உளவியல் நிபுணர்களின் வித்தியாசமான அணுகுமுறை மாணவர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், பிளஸ்1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், இதுபோன்ற சந்தேகங்களை, பெண் உளவியல் நிபுணரிடம் கேட்டறிந்துகொள்ள தயக்கம் காண்பிக்கின்றனர். ஒவ்வொரு மண்டலத்துக்கும், ஆண் மற்றும் பெண் என இரண்டு உளவியல் நிபுணர்களை நியமிக்க வேண்டும்" என்றார்.
தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், "பாலியல் சார்ந்த பல்வேறு சந்தேகங்களால், தானாக தடம் மாறுபவர்கள், பிறரிடம் சிக்கிக் கொள்பவர்கள் என இரண்டு பிரிவு மாணவ, மாணவிகள் உள்ளனர்.
பள்ளிகளுக்கே ஆபாச வீடியோக்கள் கொண்ட மெமெரி கார்டு, மொபைல் போன் போன்றவற்றை திருட்டுத்தனமாக கொண்டு வருகின்றனர். இதுபோன்ற பொருட்களை பறிமுதல் செய்து கண்டிப்பதுடன், பெற்றோர்களை அழைத்து, தகவல் தெரிவிக்கிறோம். இதனால் மட்டும் மாணவர்கள் மத்தியில் மாற்றங்களை காண இயலவில்லை" என்றார்.