பல்கலைகளை ஆய்வுக்களமாக மாற்ற வேண்டும் என, துணைவேந்தர்களிடம், கவர்னர் ரோசய்யா அறிவுறுத்தினார்.தமிழகத்தில் உள்ள 20 துணைவேந்தர்கள் பங்கேற்ற கருத்தரங்கம், சென்னை ராஜ்பவனில், பல்கலைகளின் வேந்தரான கவர்னர் ரோசய்யா தலைமையில் நடந்தது. கருத்தரங்கை துவக்கி வைத்து, கவர்னர் ரோசய்யா பேசியதாவது:உயர்கல்வியில் தேவையான மாற்றங்களை கொண்டு வர, தீவிர யோசனைகள் தற்போது நடக்கின்றன. சமீபத்தில், லண்டன், டைம்ஸ் பத்திரிகையின் உயர்கல்வி இதழ் வெளியிட்ட உலகளவில் சிறந்த 200 பல்கலைகளில், நம் நாட்டை சேர்ந்த ஒரு பல்கலைக்கூட இடம் பெறாதது கவலை அளிக்கிறது.பல்கலைகளும், கல்வி நிறுவனங்களும், கூடுதலாக சிறிய முயற்சி எடுத்து, இளைஞர்களை நேர்வழிப்படுத்தினாலே, சிறந்தவர்களாக உருவாக்கலாம். உள்ளூர் தேவைகள் அடிப்படையில், பாடத்திட்டங்களின் கட்டமைப்பை மாற்றி மறுவரையறை செய்ய வேண்டும்.பல்கலைக்கழகங்களை, ஆய்வுக்களமாக மாற்றுவதை, தாரக மந்திரமாக துணைவேந்தர்கள் கொள்ள வேண்டும். இளைஞர்களை அவர்கள் விரும்பும் துறையில் முன்னேற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.