மை ஷேர் அமைப்பின் சார்பாக பொதுமக்களிடம் இருந்து பார்வையற்ற மாணவர்களின் கல்விக்காக புத்தகங்களை சேகரிக்கும் நிகழ்ச்சி சென்னை கே.கே. நகர் பகுதியில் உள்ள சிவன் கோவில் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் ஞாநி, மை ஷேர் அமைப்பின் தலைவர் ஹரிதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற புத்தக சேமிப்பு நிகழ்ச்சியில் ஆயிரக் கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டு, தாங்கள் பயன்படுத்திய புத்தகங்களை பார்வையற்ற மாணவர்களுக்காக வழங்கினர்.
இது குறித்து மை ஷேர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரமிளா ஹரி கூறும்போது, “இந்த நிகழ்ச்சியில் பொது மக்கள் தாங்கள் பயன்படுத்திய புத்தகங்களை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியின் மூலம் பார்வையற்ற கல்லூரி மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அது தவிர பொது அறிவு, நாவல், கணினி , பள்ளி மாணவர்களுக்கான புத்தகங்களும் பெறப்பட்டுள்ளன” என்றார்.
மை ஷேர் அமைப்பு மூலம் சேகரிக்கப்பட்ட புத்தகங்கள் குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரியில் வைக்கப்பட உள்ளது. பின்னர் பார்வையற்ற அமைப்புகளில் உள்ள மாணவர் களை வரவழைத்து தினமும் மாலை நேரத்தில் கல்லூரி மாணவர்களால் அதிலுள்ள பாடங்கள் படித்துக் காட்டப்பட உள்ளன.