அண்ணாபல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரிகளில் பேராசிரியர்கள், கூடுதல் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் என மொத்தம் 450 பேர்களை விரைவில் நியமிக்க அண்ணாபல்கலைக்கழகம் முடிவு செய்து உள்ளது.

தமிழ்நாட்டில் கல்வித்தரத்தை உலகத்தரத்திற்கு உயர்த்தவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் முதல் அமைச்சர் ஜெயலலிதா கல்விக்காக பல்வேறு சிறப்பான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். அதைத்தொடர்ந்து உயர்கல்வித்துறைக்கும், பள்ளிக்கல்வித்துறைக்கும் நடப்பு ஆண்டில் அதிக நிதியை ஒதுக்கி உள்ளார்.
மேலும் ஆராய்ச்சிக்காகவும் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு தனியாக நிதியை ஒதுக்கி உள்ளார். கல்வி மேம்பாட்டுக்காக பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை, பள்ளிக்கல்வித்துறை மூலம் நிரப்ப உத்தரவிட்டார். அதன்படி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அதுபோல அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் உதவி பேராசிரியர்கள் 2ஆயிரம் பேர் விரைவில் நியமிக்க அதற்கான ஆயத்தப்பணியில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஈடுபட்டுள்ளது.
450 ஆசிரியர்கள் நியமனம்
தமிழ்நாட்டில் காஞ்சீபுரம், ஆரணி, விழுப்புரம், திண்டிவனம், பட்டுக்கோட்டை, திருக்குவளை, அரியலூர், பண்ருட்டி, ராமநாதபுரம், திண்டுக்கல், நாகர்கோவில், தூத்துக்குடி ஆகிய இடங்களில் அண்ணாபல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகள் உறுப்புக்கல்லூரிகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த கல்லூரிகளில் பேராசிரியர்கள், கூடுதல் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் ஆகிய பணிகள் 450 காலியாக இருக்கின்றன. இந்த இடங்களை நிரப்ப அரசும், அண்ணாபல்கலைக்கழகமும் முடிவு செய்துள்ளன.
அதன்படி நேரடியாக 450 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு அண்ணாபல்கலைக்கழக இணையதளத்தில் இந்த மாத (செப்டம்பர்) இறுதிக்குள் வெளியிடப்பட உள்ளது. விண்ணப்பித்தவர்களின் தகுதி, இட ஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.