தமிழகத்தில், டிப்ளமோ நர்சிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இம்மாதம் 15ம் தேதி தொடங்கும் என, மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில், டிப்ளமோ நர்சிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இம்மாதம் 15ம் தேதி தொடங்கும் என, மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் 23 அரசு நர்சிங் கல்லூரிகள் உள்ளன. இதில், டிப்ளமோ நர்சிங் இரண்டாண்டு படிப்புக்கு 2,000 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 8,101 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான தர வரிசைப் பட்டியல் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது.மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 15ம் தேதி தொடங்குகிறது. அன்று, மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடக்கிறது.தொடர்ந்து 18ம் தேதி வரை, பிற பிரிவுகளுக்கான கலந்தாய்வும் நடக்க உள்ளது. மேலும் விவரங்கள் தேவைப்படுவோர், tn.health.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என மருத்துவக்கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

ரயில்வே தொடர்பான படிப்புகளை மட்டும் வழங்கும் வகையில், ஒரு ரயில்வே பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான செயல்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்துள்ளார்.

ரயில்வே தொடர்பான படிப்புகளை மட்டும் வழங்கும் வகையில், ஒரு ரயில்வே பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான செயல்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்துள்ளார்.இதுதொடர்பாக கூறப்படுவதாவது: இந்த வகையில், இந்தியாவில் அமைக்கப்படும் முதல் கல்வி நிறுவனமாக திகழும் இந்த ரயில்வே பல்கலை, சீன கல்வி நிறுவனங்களை மாதிரியாக கொண்டிருக்கும்.சீன தேசிய ரயில்வே நிர்வாகத்திடம், தாங்கள் இதுதொடர்பாக மேற்கொண்ட கலந்துரையாடல் பற்றிய தகவல், மத்திய ரயில்வே அமைச்சகத்தால், மத்திய கேபினட் செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவற்றுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.ரயில்வே தொடர்பான படிப்புகளை கற்றுக்கொடுக்கும் பல்வேறான கல்வி நிறுவனங்கள் சீனாவில் உள்ளன மற்றும் அவை கடந்த 100 ஆண்டுகால பாரம்பரியத்தைப் பின்பற்றி வருகின்றன. எனவே, இப்படிப்புகள் தொடர்பான பாடத்திட்டம் வகுத்தல் மற்றும் நிர்வாகம் தொடர்பாக, சீன அதிகாரிகளின் உதவி கேட்கப்படும். ஏனெனில், இதுதொடர்பான நீண்ட அனுபவத்தைப் பெற்றவர்கள் அவர்கள்.ரயில்வே தொடர்பான பொறியியல் படிப்புகளை வழங்குவது சம்பந்தமாக, ஐ.ஐ.டி., காரக்பூர், ரயில்வே அமைச்சகத்துடன் ஒத்துழைப்பை மேற்கொள்ளும். இதே நோக்கத்திற்காக, EdCIL உடன், வரும் செப்டம்பர் 30ம் தேதி, ஒரு ஒப்பந்தத்தில், ரயில்வே அமைச்சகம் கையெழுத்திடவுள்ளது.இந்த ரயில்வே பல்கலையை, நாட்டின் எந்த இடத்தில் அமைப்பது என்பது, EdCIL புராஜெக்ட் மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிவுரை ஆகியவற்றின் அடிப்படையில் முடிவு செய்யப்படும். அதேசமயத்தில், இந்த பல்கலை அமையவுள்ள இடம், பல்வகைப் போக்குவரத்தின் மூலம் எளிதாக அடையக்கூடிய வகையில் கட்டாயம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ரயில்வே தொடர்பான இளநிலை மற்றும் முதுநிலை அளவிலான, பொறியியல் மற்றும் மேலாண்மை படிப்புகள் வழங்கப்படும் என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அண்ணாபல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரிகளில் பேராசிரியர்கள், கூடுதல் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் என மொத்தம் 450 பேர்களை விரைவில் நியமிக்க அண்ணாபல்கலைக்கழகம் முடிவு செய்து உள்ளது.

தமிழ்நாட்டில் கல்வித்தரத்தை உலகத்தரத்திற்கு உயர்த்தவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் முதல் அமைச்சர் ஜெயலலிதா கல்விக்காக பல்வேறு சிறப்பான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். அதைத்தொடர்ந்து உயர்கல்வித்துறைக்கும், பள்ளிக்கல்வித்துறைக்கும் நடப்பு ஆண்டில் அதிக நிதியை ஒதுக்கி உள்ளார்.
மேலும் ஆராய்ச்சிக்காகவும் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு தனியாக நிதியை ஒதுக்கி உள்ளார். கல்வி மேம்பாட்டுக்காக பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை, பள்ளிக்கல்வித்துறை மூலம் நிரப்ப உத்தரவிட்டார். அதன்படி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அதுபோல அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் உதவி பேராசிரியர்கள் 2ஆயிரம் பேர் விரைவில் நியமிக்க அதற்கான ஆயத்தப்பணியில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஈடுபட்டுள்ளது.
450 ஆசிரியர்கள் நியமனம்
தமிழ்நாட்டில் காஞ்சீபுரம், ஆரணி, விழுப்புரம், திண்டிவனம், பட்டுக்கோட்டை, திருக்குவளை, அரியலூர், பண்ருட்டி, ராமநாதபுரம், திண்டுக்கல், நாகர்கோவில், தூத்துக்குடி ஆகிய இடங்களில் அண்ணாபல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகள் உறுப்புக்கல்லூரிகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த கல்லூரிகளில் பேராசிரியர்கள், கூடுதல் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் ஆகிய பணிகள் 450 காலியாக இருக்கின்றன. இந்த இடங்களை நிரப்ப அரசும், அண்ணாபல்கலைக்கழகமும் முடிவு செய்துள்ளன.
அதன்படி நேரடியாக 450 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு அண்ணாபல்கலைக்கழக இணையதளத்தில் இந்த மாத (செப்டம்பர்) இறுதிக்குள் வெளியிடப்பட உள்ளது. விண்ணப்பித்தவர்களின் தகுதி, இட ஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.