ஆசிரியர் தேர்வு வாரியம், முதுகலை ஆசிரியர் 2,000 பேர், பட்டதாரி ஆசிரியர் 10 ஆயிரம் பேர் அடங்கிய பட்டியலை, பள்ளி கல்வித்துறைக்கு அனுப்பி உள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம், முதுகலை ஆசிரியர் 2,000 பேர், பட்டதாரி ஆசிரியர் 10 ஆயிரம் பேர் அடங்கிய பட்டியலை, பள்ளி கல்வித்துறைக்கு அனுப்பி உள்ளது. தேர்வு பெற்றவர்களில் ஒரு சிலருக்கு, முதல்வர் ஜெயலலிதா, விரைவில் தலைமை செயலகத்தில் பணி நியமன ஆணையை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து, 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு, ஜூலையில் நடந்த போட்டி தேர்வில் இருந்து, 2,000 முதுகலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.தேர்வுபெற்ற, 12 ஆயிரம் ஆசிரியரின் தனிப்பட்ட கோப்புகளை, கடந்த மூன்று நாட்களில், பள்ளி கல்வித்துறையிடம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஒப்படைத்துள்ளது. எனவே, ஓரிரு நாளில், பணி நியமன நிகழ்ச்சி நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.பத்தாயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர் பணி நியமனம் என்பதால், எளிய நிகழ்ச்சியாக நடத்துவதா அல்லது பிரமாண்டமாக விழா நடத்தி, முதல்வர் கையால் பணி நியமன உத்தரவை வழங்குவதா என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. கடந்த, 2012ல், 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கும் விழா, சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் பிரமாண்டமாக நடந்தது. அதன்பின் தற்போதுதான், அதிகளவில், ஆசிரியர் நியமனம் செய்யப்பட உள்ளனர்.எந்த வகையில் நிகழ்ச்சியை நடத்துவது என்பது குறித்த முடிவை, முதல்வர் எடுப்பார் என, கல்வித் துறை வட்டாரம் தெரிவித்தது. இதுபோன்ற பிரமாண்ட விழாவை நடத்த வேண்டும் எனில், விழா ஏற்பாட்டிற்கு, 20 நாளாவது தேவைப்படும். எனவே, மாணவர்களின் நலன் கருதி, ஓரிரு நாளில், எளிய முறையில், தலைமை செயலகத்தில் நிகழ்ச்சியை நடத்தி, 10 பேருக்கு முதல்வர், பணி நியமன உத்தரவை வழங்குவதற்கு, அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன்பின், கலந்தாய்வு நடத்தி, 12 ஆயிரம் பேரையும் நியமனம் செய்ய, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்கும்.2,000 இடைநிலை ஆசிரியர் பணி அறிவிப்பு இன்று வெளியாகிறது: இட ஒதுக்கீடு வாரியாக, 2,000 இடைநிலை ஆசிரியர் தேர்வு செய்யப்படுவது குறித்த அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம், இன்று வெளியிடுகிறது. ஏற்கனவே நடந்த தகுதித் தேர்வுகளில் இருந்து, மதிப்பெண் அடிப்படையில், 2,000 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.ஆனால், எந்தெந்த பிரிவில், எத்தனை பணியிடம் நிரப்பப்பட உள்ளது என்ற அறிவிப்பு இன்று வெளியாகிறது. இதைத் தொடர்ந்து, வரும் 28ம் தேதிக்குள், 2,000 பேரின் தேர்வு பட்டியல், www.trb.tn.nic.inஎன்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.

பல்கலைகளை ஆய்வுக்களமாக மாற்ற வேண்டும் என, துணைவேந்தர்களிடம், கவர்னர் ரோசய்யா அறிவுறுத்தினார்

 பல்கலைகளை ஆய்வுக்களமாக மாற்ற வேண்டும் என, துணைவேந்தர்களிடம், கவர்னர் ரோசய்யா அறிவுறுத்தினார்.தமிழகத்தில் உள்ள 20 துணைவேந்தர்கள் பங்கேற்ற கருத்தரங்கம், சென்னை ராஜ்பவனில், பல்கலைகளின் வேந்தரான கவர்னர் ரோசய்யா தலைமையில் நடந்தது. கருத்தரங்கை துவக்கி வைத்து, கவர்னர் ரோசய்யா பேசியதாவது:உயர்கல்வியில் தேவையான மாற்றங்களை கொண்டு வர, தீவிர யோசனைகள் தற்போது நடக்கின்றன. சமீபத்தில், லண்டன், டைம்ஸ் பத்திரிகையின் உயர்கல்வி இதழ் வெளியிட்ட உலகளவில் சிறந்த 200 பல்கலைகளில், நம் நாட்டை சேர்ந்த ஒரு பல்கலைக்கூட இடம் பெறாதது கவலை அளிக்கிறது.பல்கலைகளும், கல்வி நிறுவனங்களும், கூடுதலாக சிறிய முயற்சி எடுத்து, இளைஞர்களை நேர்வழிப்படுத்தினாலே, சிறந்தவர்களாக உருவாக்கலாம். உள்ளூர் தேவைகள் அடிப்படையில், பாடத்திட்டங்களின் கட்டமைப்பை மாற்றி மறுவரையறை செய்ய வேண்டும்.பல்கலைக்கழகங்களை, ஆய்வுக்களமாக மாற்றுவதை, தாரக மந்திரமாக துணைவேந்தர்கள் கொள்ள வேண்டும். இளைஞர்களை அவர்கள் விரும்பும் துறையில் முன்னேற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழகத்தைச் சேர்ந்த 22 ஆசிரியர்களுக்கு, தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு செப்., 5ம் தேதி, டில்லி, ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருது வழங்க உள்ளார்.

 தமிழகத்தைச் சேர்ந்த 22 ஆசிரியர்களுக்கு, தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு செப்., 5ம் தேதி, டில்லி, ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருது வழங்க உள்ளார்.
சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, அந்தந்த மாநில அரசுகளும், தேசிய அளவில், மத்திய அரசும், ஆண்டுதோறும் விருது வழங்கி கவுரவிக்கின்றன.
ஆசிரியராக வாழ்க்கையை துவக்கி, ஜனாதிபதியாக உயர்ந்த, ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான, செப்., 5ம் தேதி இந்த விருது வழங்கப்படுகிறது. தமிழகத்தில் இருந்து, தேசிய விருதுக்கு 22 ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
ஆரம்ப, நடுநிலைப் பள்ளி அளவில், 15 ஆசிரியரும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி அளவில், ஏழு ஆசிரியரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் மட்டும் இல்லாமல், அனைத்து மாநிலங்களிலும் இருந்தும், தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு, செப்., 5ம் தேதி, ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில், ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி விருது வழங்க உள்ளார்.
விருதில், ரொக்கம் 25 ஆயிரம் ரூபாய், வெள்ளி பதக்கம் மற்றும் பாராட்டு மடல் ஆகியவை அடங்கும். விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர் விவரம்:
1. ஆரோக்கியமேரி, தலைமை ஆசிரியை, செயின்ட் ஆன்ஸ் ஆரம்ப பள்ளி, ராயபுரம், சென்னை.
2. சம்பங்கி, தலைமை ஆசிரியை, அரசு நடுநிலைப்பள்ளி, கந்தனேரி, வேலூர் மாவட்டம்.
3. கந்தசாமி, தலைமை ஆசிரியர், அரசு நடுநிலைப்பள்ளி, கடப்பை, விழுப்புரம் மாவட்டம்.
4. செல்வராஜு, பட்டதாரி ஆசிரியர், ஆனந்தராஜு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி, மரைங்கநாயநல்லூர், நாகை மாவட்டம்.
5. நடராஜன், தலைமை ஆசிரியர், ஆதிதிராவிடர் நலத்துறை ஆரம்ப பள்ளி, சிக்கல்நாயக்கன்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம்.
6. ஆண்டிரூவ்ஸ், தலைமை ஆசிரியர், சி.எஸ்.ஐ., ஆரம்ப பள்ளி, உறையூர், திருச்சி மாவட்டம்.
7. தெரேன்ஸ், தலைமை ஆசிரியர், ஆர்.சி., அமலாராக்கினி நடுநிலைப்பள்ளி, குளித்தலை, கரூர் மாவட்டம்.
8. நளினி, தலைமை ஆசிரியை, அரசு நடுநிலைப்பள்ளி, தாரவைதோப்பு, பாம்பன், ராமநாதபுரம் மாவட்டம்.
9. முத்தையா, தலைமை ஆசிரியர், அரசு நடுநிலைப்பள்ளி, கே.செம்பட்டி, மதுரை மாவட்டம்.
10. உதயகுமார், தலைமை ஆசிரியர், அரசு ஆரம்ப பள்ளி, சின்னகொண்டாலம்பட்டி, சேலம் மாவட்டம்.
11. நசிருதீன், தலைமை ஆசிரியர், நகராட்சி உருது மகளிர் நடுநிலைப்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம்.
12. ராமகிருஷ்ணன், அரசு ஆரம்ப பள்ளி, வெள்ளாளபாளையம், கோவை மாவட்டம்.
13. தாமஸ், தலைமை ஆசிரியர், பாரத் மாதா உதவிபெறும் ஆரம்ப பள்ளி, உப்பாட்டி, நீலகிரி மாவட்டம்.
14. விநாயக சுந்தரி, தலைமை ஆசிரியை, சங்கரகுமார் ஆரம்ப பள்ளி, சங்கரலிங்கபுரம், கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம்.
15. ராமசாமி, தலைமை ஆசிரியர், வேணுகோபால விலாச உதவிபெறும் ஆரம்ப பள்ளி, விஸ்நாம்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம்.
16. நீலகண்டன், தலைமை ஆசிரியர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புதுபேட்டை, வேலூர் மாவட்டம்.
17. சாஷி ஸ்வரண்சிங், முதுகலை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, கோடம்பாக்கம், சென்னை.
18. கஸ்தூரி, தலைமை ஆசிரியர், நகராட்சி மேல்நிலைப்பள்ளி, ஜமீன் பல்லாவரம், காஞ்சிபுரம் மாவட்டம்.
19. ஆதியப்பன், தலைமை ஆசிரியர், எம்.எப்.எஸ்.டி., மேல்நிலைப்பள்ளி, சவுகார்பேட்டை, சென்னை.
20. செல்வசேகரன், முதுகலை ஆசிரியர், கிரசன்ட் மேல்நிலைப்பள்ளி, அவனியாபுரம், தஞ்சாவூர் மாவட்டம்.
21. கஸ்தூரி, பட்டதாரி ஆசிரியர், மார்னிங் ஸ்டார் உதவிபெறும் உயர்நிலைப்பள்ளி, செங்குந்தபுரம், கரூர் மாவட்டம்.
22. பாலுசாமி, தலைமை ஆசிரியர், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, பீளமேடு, கோவை மாவட்டம்.