சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புகளில் சேர, 3,768 பேர் விண்ணப்பித்துள்ளனர். கலந்தாய்வை, விரைவில் துவங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

தமிழத்தில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புகளுக்கு, ஆறு அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 296 இடங்கள் உள்ளன. இதுதவிர 20 சுயநிதி கல்லூரிகளில் இருந்து 994 இடங்கள், அரசு ஒதுக்கீட்டிற்கு கிடைக்கும். இதன்படி, 1,290 இடங்கள் உள்ளன. இந்த படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் ஜூலை 14ல் துவங்கி, 30ம் தேதி வரை நடந்தது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெற ஜூலை 31ம் தேதி, கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. குறித்த நாளுக்குள், 3,768 பேரின் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதன்படி, 1,290 இடங்களுக்கு, 3,768 பேர் போட்டியில் உள்ளனர். தாமதமின்றி கலந்தாய்வை துவங்க வேண்டும் என இவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரக அதிகாரி ஒருவர் கூறுகையில், கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு, இந்திய மருத்துவ கவுன்சிலின் முறையான அனுமதி பெற வேண்டும். அனுமதி, ஒரு வாரத்திற்குள் கிடைக்கும் என நம்புகிறோம். இந்த மாத இறுதியிலோ, அடுத்த மாதத் துவக்கத்திலோ கலந்தாய்வை துவங்க திட்டமிட்டுள்ளோம்" என்றார்.