சில ஆண்டுகள் கிளினிக்கில் துறையில் பணிபுரிந்து விட்டு, அதே துறையில் நிர்வாகம் மற்றும் மேலாண்மை பணிகளில் செல்ல விரும்புவோருக்கு முதுநிலை பப்ளிக் ஹெல்த் படிப்பு துணை புரிகிறது. வெறும் கிளினிக்கல் பயிற்சிகளில் மட்டுமே திருப்தியடையாமல், நிர்வாக பணிகளிலும் ஆர்வம் உள்ள நபர்களுக்கு இந்த படிப்பு ஒரு நல்ல வடிகால்.
சில கல்வி நிறுவனங்களில், இந்த படிப்பில் ( மாஸ்டர்ஸ் இன் பப்ளிக் ஹெல்த் - எம்பிஎச்) மருத்துவம் சாராத நபர்களுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது. இது ஒரு மேலாண்மை சார்ந்த படிப்பாக இருப்பதால், பொதுத்துறையில் எப்படி சிறப்பாக பணிபுரிவது என்பதை கற்றுக் கொள்ள முடியும்.
* வரும்முன் காப்போம் கருத்தாக்கம்:
ஆரோக்கியமான ஒரு வாழ்க்கையை விட, மனிதனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று எதுவுமில்லை. பப்ளிக் ஹெல்த் என்பது கல்வி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கற்றுக் கொடுப்பது மற்றும் நோய்களை தடுப்பது ஆகிய நடைமுறைகளின் வழியாக ஒரு சமூகத்தின் சுகவாழ்வை உறுதி செய்யும் ஒரு அறிவியலாகும்.
இப்படிப்பில் ஒரு மாணவர்,சமூகத்தை எவ்வாறு அணுகி, அதன் சுகாதார அம்சங்களை ஆராய்ந்து விஷயங்களை அறிந்து கொண்டு சுகாதார சிக்கல்களை எவ்வாறு தீர்ப்பது என்பதை பற்றி கற்றுத் தரப்படும்.
* பப்ளிக் ஹெல்த் மற்றும் மருத்துவமனை நிர்வாகம்:
மருத்துவமனை மேலாண்மை மற்றும் நிர்வாகம் ஆகிய 2 விஷயங்களில் இருந்தும் முதுநிலை பப்ளிக் ஹெல்த் படிப்பு என்பது வேறுபட்டதாகும்.
மெடிக்கல் சயின்ஸ் மற்றும் துணைநிலை மெடிக்கல் சயின்ஸ் படித்த மாணவர்களுக்கு, முதுநிலை மருத்துவ மனை நிர்வாகப் படிப்பு ஏற்றது. மருத்துவமனை மற்றும் கிளினிக்குகளில் பணிபுரிய விரும்பும் நபர்கள் இப்படிப்புகளை மேற்கொள்கிறார்கள். இப்படிப்பு மருத்துவமனை இயக்கம் தொடர்பானது.
அதேசமயம், ஹாஸ்பிடல் மேலாண்மை படிப்பானது, நிதி, இயக்கம், பணியமர்த்தல் உள்ளிட்ட மருத்துவமனை மேலாண்மை தொடர்பான பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது. இது ஒரு எம்.பி.ஏ., படிப்பை போன்றது. அனைத்து பிரிவு பட்டதாரிகளும் இதில் சேரலாம்.
* எம்பிஎச் படிப்பின் அவசியம்:
மருத்துவ சேவை அமைப்புகள் பலவிதமான மாற்றங்களுக்கு உட்பட்டு வருகின்றன. சுகாதார மேம்பாடு மற்றும் நோய் தடுப்பு உள்ளிட்ட அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, மருத்துவ செலவை குறைத்து ஆரோக்கிய வாழ்வில் கவனம் செலுத்தப்படுகிறது.
இத்துறை நிபுணர்களின் தேவை இன்று மிகவும் அதிகளவில் உள்ளது மற்றும் இதனால் பப்ளிக் ஹெல்த் படிப்புகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. மாஸ்டர்ஸ் இன் பப்ளிக் ஹெல்த் பட்டதாரிகள் பல்வேறு அரசு நிறுவனங்களில் பணிக்கு அமர்த்தப்படுகிறார்கள்.
* பாடத்திட்டம்:
இப்படிப்பின் முதல் வருடத்தில் மாணவர்கள் எம்.பி.ஏ தொடர்புடைய அம்சங்களை படிக்கிறார்கள். ஆனால், இரண்டாமாண்டில், ஸ்பெஷலைசேஷன் நிலைக்கு வருகிறார்கள். மருத்துவம், துணை மருத்துவம் மற்றும் பாராமெடிக்கல் பிரிவுகளில் இருந்து வருபவர்களுக்கு கூடுதல் பலன்கள் உண்டு. ஏனெனில், இப்படிப்பு பப்ளிக் ஹெல்த் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் தொடர்பானதாகும்.
* பணி வாய்ப்புகள்:
இப்படிப்பு பலவிதமான பணிவாய்ப்புகளை வழங்குகிறது. அரசு துறைகள், அரசு சாரா துறைகள், என்.ஜி.ஓக்கள், திட்ட கமிஷன், சுகாதார மற்றும் குடிநீர் துறை, டபிள்யூஎச்ஓ, யுனிசெப், யுஎன்பிஏ, யுஎன்டிபி, தனியார் மருத்துவமனைகள் மற்றும் பார்மசூடிகல் நிறுவனங்கள் ஆகிய பல்வேறு அமைப்புகளில் திட்ட ஒருங்கிணைப்பாளர், அனலிஸ்ட், கன்சல்டன்ட், ஆராய்ச்சியாளர்கள், முன்னறிவிப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பணிக்கு சேரலாம்.
* படிப்பின் அம்சங்கள்:
எவால்யூசன் ஆப் பப்ளிக் ஹெல்த், எபிடெமியாலஜி, ஹெல்த் எகனாமிக்ஸ், பிரிவென்சன் ஆப் டிசீஸ் மற்றும் டிசபிலீட்டிஸ், ஹெல்த் எஜுகேஷன் அன்ட் அவேர்னஸ், உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாகும்.