மாநிலம் முழுவதும் அங்கீகாரம் இல்லாத 2,000 மழலையர் பள்ளிகளுக்கு, விரைவில் அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, வட்டாரம் தெரிவித்தது.

 மாநிலம் முழுவதும் அங்கீகாரம் இல்லாத 2,000 மழலையர் பள்ளிகளுக்கு, விரைவில் அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, வட்டாரம் தெரிவித்தது.அங்கீகாரம் இல்லாத 1,400 மழலையர் பள்ளிகளை வரும் 2015 ஜனவரிக்குள் மூட நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் தமிழக அரசு தெரிவித்தது. அதன்படி, அங்கீகாரம் இல்லாத மழலையர் பள்ளிகளுக்கு தொடக்க கல்வித்துறை சார்பில் தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது.நோட்டீஸ் கிடைத்த மூன்று நாளுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்; இல்லை எனில் பள்ளியை மூட தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழலையர் பள்ளிகள் குறித்த முழு பட்டியல் தொடக்க கல்வித் துறையிடம் இல்லை. ஆனால் மாநிலம் முழுவதும் 2,000 மழலையர் பள்ளிகள் இருக்கலாம் என துறை வட்டாரம் தெரிவிக்கிறது.ஒரு பக்கம் மழலையர் பள்ளிகளை மூட நோட்டீஸ் அனுப்பினாலும், அனைத்து பள்ளிகளும் கட்டட உறுதி சான்று, தீயணைப்பு துறை சான்று உள்ளிட்ட பல சான்றிதழ்களை சமர்பித்து அங்கீகாரம் கேட்டு முறையாக தொடக்க கல்வித் துறைக்கு விண்ணப்பித்தால் அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொடக்க கல்வித் துறை வட்டாரம் தெரிவித்தது.இதுகுறித்து துறை வட்டாரம் கூறியதாவது: அங்கீகாரம் இல்லாத மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகளில், தலா 50 குழந்தைகளுக்கு குறையாமல் படித்து வருகின்றனர். அதன்படி இந்த பள்ளிகளில் (பிரீ கேஜி முதல் யு.கே.ஜி. வரை) ஒரு லட்சம் குழந்தைகள் படித்து வருவதாக அறிகிறோம். பட்டியலில் இடம் பெறாமல் விடுபட்ட மழலையர் பள்ளிகளை அடையாளம் காண, உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.திடீரென 2,000 பள்ளிகளையும் மூடினால், இங்கு படிக்கும் குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகும். எனவே ஒரு பக்கம் மூடுவதற்கு நோட்டீஸ் அனுப்பினாலும், மறுபக்கம் முறையாக அங்கீகாரம் பெற சம்பந்தப்பட்ட பள்ளிகள் தொடக்க கல்வித்துறையிடம் விண்ணப்பிக்கலாம். உரிய சான்றிதழ்களை பெற்று விண்ணப்பித்ததும் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசிடம் அனுமதி பெற்று அனைத்து பள்ளிகளுக்கும் அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு துறை வட்டாரம் தெரிவித்தது.

"பத்தாயிரம் தனியார் பள்ளிகளுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான புதிய கட்டணம் நிர்ணயம் செய்யும் பணி, விரைவில் துவங்கும்" என கட்டண நிர்ணய குழு தலைவர் சிங்காரவேலு தெரிவித்தார்

"பத்தாயிரம் தனியார் பள்ளிகளுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான புதிய கட்டணம் நிர்ணயம் செய்யும் பணி, விரைவில் துவங்கும்" என கட்டண நிர்ணய குழு தலைவர் சிங்காரவேலு தெரிவித்தார்.தனியார் பள்ளிகளுக்கு, கட்டணம் நிர்ணயம் செய்வதற்காக, தமிழக அரசு, கட்டண நிர்ணய குழுவை அமைத்துள்ளது. இக்குழு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, தனியார் பள்ளிகளுக்கு, புதிய கட்டணத்தை நிர்ணயிக்கிறது.கடந்த, 2012 - 13ல் இருந்து, நடப்பு கல்வி ஆண்டுடன், மூன்று ஆண்டை நிறைவு செய்யும் 10 ஆயிரம் தனியார் பள்ளிகளுக்கு, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான புதிய கட்டணத்தை நிர்ணயம் செய்ய, கட்டண நிர்ணய குழு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, கட்டண நிர்ணய குழு தலைவர் சிங்காரவேலு நிருபர்களிடம் கூறியதாவது:பத்தாயிரம் தனியார் பள்ளிகளுக்கு, 2015 - 16, 16 - 17, 17 - 18 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கு புதிய கட்டணம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இந்த பணி விரைவில் துவங்கும்.கன்னியாகுமரி மாவட்டத்தில் 13 பள்ளிகள், குழு நிர்ணயித்தகட்டணத்தை விட, அதிக கட்டணம் வசூலித்ததாக ஒருவர் புகார் கொடுத்துள்ளார். பெற்றோர் - பள்ளி நிர்வாகம் இடையே அதிக கட்டணம் வசூலிப்பு தொடர்பாக நடந்த உரையாடலை அவர்களுக்கு தெரியாமல் ஒருவர், வீடியோ எடுத்து அதை சிடி -யாக, குழுவிடம் கொடுத்துள்ளார். அந்த புகார் குறித்து, விரைவில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சிங்காரவேலு தெரிவித்தார்.1.5 கோடி திருப்பி தர உத்தரவு : குழு நிர்ணயம் கட்டணத்தை பெரும்பாலான தனியார் பள்ளிகள்வசூலிப்பதில்லை. கூடுதல் கட்டணத்தைதான் வசூலிக்கின்றன. இதில், ஒரு சில பள்ளிகள் மீதுதான் எழுத்துப்பூர்வமாக, குழுவிற்கு புகார் வருகின்றன. இந்த புகார்கள் மீது உடனடி விசாரணை நடத்தி, அதிக கட்டணம் வசூலித்தது நிருபணமானால், கூடுதல் கட்டணத்தை திருப்பி தரவும் குழு உத்தரவிடுகிறது.அதன்படி சென்னை, பெரம்பூரில் உள்ள ஒரு அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி, குழு நிர்ணயித்த கட்டணத்தை விட, கூடுதல் கட்டணம் வசூலித்தது குறித்து, குழுவிற்கு புகார் வந்தது. விசாரணையில், புகார் உண்மை என தெரியவந்தது. இதையடுத்து, பள்ளி நிர்வாகம், கூடுதலாக வசூலித்த 1.5 கோடி ரூபாயை, உடனடியாக திருப்பி தர வேண்டும் என சிங்காரவேலு உத்தரவிட்டுள்ளார்.

மை ஷேர் அமைப்பின் சார்பாக பொதுமக்களிடம் இருந்து பார்வையற்ற மாணவர்களின் கல்விக்காக புத்தகங்களை சேகரிக்கும் நிகழ்ச்சி சென்னை கே.கே. நகர் பகுதியில் உள்ள சிவன் கோவில் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

மை ஷேர் அமைப்பின் சார்பாக பொதுமக்களிடம் இருந்து பார்வையற்ற மாணவர்களின் கல்விக்காக புத்தகங்களை சேகரிக்கும் நிகழ்ச்சி சென்னை கே.கே. நகர் பகுதியில் உள்ள சிவன் கோவில் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் ஞாநி, மை ஷேர் அமைப்பின் தலைவர் ஹரிதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற புத்தக சேமிப்பு நிகழ்ச்சியில் ஆயிரக் கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டு, தாங்கள் பயன்படுத்திய புத்தகங்களை பார்வையற்ற மாணவர்களுக்காக வழங்கினர்.
இது குறித்து மை ஷேர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரமிளா ஹரி கூறும்போது, “இந்த நிகழ்ச்சியில் பொது மக்கள் தாங்கள் பயன்படுத்திய புத்தகங்களை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியின் மூலம் பார்வையற்ற கல்லூரி மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அது தவிர பொது அறிவு, நாவல், கணினி , பள்ளி மாணவர்களுக்கான புத்தகங்களும் பெறப்பட்டுள்ளன” என்றார்.
மை ஷேர் அமைப்பு மூலம் சேகரிக்கப்பட்ட புத்தகங்கள் குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரியில் வைக்கப்பட உள்ளது. பின்னர் பார்வையற்ற அமைப்புகளில் உள்ள மாணவர் களை வரவழைத்து தினமும் மாலை நேரத்தில் கல்லூரி மாணவர்களால் அதிலுள்ள பாடங்கள் படித்துக் காட்டப்பட உள்ளன.